அரசு ஊழியர் குடும்பத்திற்கு மிரட்டல்

குறிஞ்சிப்பாடி: அரசு ஊழியர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த வேங்கடம்பேட்டை, சத்திரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 33; டி.ஆர்.ஓ., நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக, பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு சென்று பண்ருட்டி தாலுகா மருங்கூரை சேர்ந்த ராமநாதன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தோர் தகராறு செய்தனர்.

வீட்டில் இருந்த குணசேகரன் மனைவி கிருத்திகா மற்றும் மகன் சக்திவேலை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் ராமநாதன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த, 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement