வீட்டிலிருந்தபடியே பழச்சாறு விற்பனையில் மாதம் ரூ.75,000 லாபம்!
'வெட்சா' என்ற நிறுவனம் வாயிலாக பழச்சாறுகள் தயாரித்து, மாதம் 75,000 ரூபாய் லாபம் ஈட்டும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த, 40 வயதாகும் லிஜா:
என் சகோதரர் அமெரிக்காவில் உள்ளார். அவர் தான், 'கோல்டு பிரெஸ்டு ஜூஸ்' இயந்திரம் குறித்தும், வெளிநாடுகளில் அதற்கான கடைகள் உள்ளது குறித்தும் கூறினார். பழங்கள் மற்றும் காய்கறிகளை அழுத்தி சாறு எடுப்பதால் அதற்கு, 'பிரெஸ்டு ஜூஸ்' என பெயர் வந்தது.
அந்த இயந்திரத்தில் பழங்கள், காய்கறிகளை போட்டால், நார்ச்சத்து உள்ளிட்டவை வீணாகாமல் சாறு மட்டும் வந்து விடும். முதலில் வீட்டு உபயோகத்துக்காக, 60,000 ரூபாய் செலவில் சிறிய, 'கோல்டு பிரெஸ்டு ஜூஸ்' இயந்திரம் வாங்கி பயன்படுத்தினோம். சுவை நன்றாக இருந்ததால், இதையே வியாபாரமாக செய்யலாம் என்ற யோசனை பிறந்தது.
'வெட்சா' என்ற பெயரில், 2023ல் விற்பனையை துவக்கினோம். முதலில், நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறினர். வாய்வழி விளம்பரமாக ஆதரவு பெருகி, இப்போது, 700 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்; மூன்று பேர் வேலை பார்க்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் அதிகரித்ததால், 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு தொழில் முறை கோல்டு பிரெஸ்டு ஜூஸ் இயந்திரங்கள் வாங்கினேன். ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளர்கள், 'புரூட் சாலட்' எனும் நறுக்கிய பழத்துண்டுகளை கேட்க ஆரம்பித்தனர். அதனால், நறுக்கிய பழங்களை தயார் செய்து விற்பனை செய்ய துவங்கினோம். என் கணவரும் ஆதரவாக இருக்கிறார்.
இப்போது, தினமும் சராசரியாக, 85 பாட்டில்களில் காய்கறி சாறு மற்றும் பழச்சாறு, நறுக்கிய பழங்கள், 50 செட்கள் விற்பனை ஆகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கே அனுப்பி விடுவதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அன்றாட தேவைக்கான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் வாங்குவோம். அப்படி வாங்கி தயாரித்தால் தான் சுவையுடன் கூடிய சத்தும் கிடைக்கும்.
அதிகாலை 4:00 மணிக்கு வேலைகளை துவக்கி, காலை 9:00 மணிக்குள் அனைவருக்கும் அனுப்பி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். 200 மில்லி, 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் அளவுகளில் விற்பனை செய்கிறோம். சில மருத்துவமனைகளுடன் இணைந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு தினமும் ஜூஸ், புரூட் சாலட் வினியோகம் செய்து வருகிறோம். மாதம், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது; இதில், 75,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
உணவு தர சான்றிதழ் வாங்கி உள்ளேன். எதிர்காலத்தில் தனியாக கடை ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. அத்துடன், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், கேரளாவிலும் விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது.
தொடர்புக்கு: 73395 98166
***
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்