எங்கள் கிராமமும் ஆடை வடிவமைப்பு மையமாக மாறும்!
தர்மபுரி மாவட்டம், சிட்லிங் கிராமத்தில் வசிக்கும், லம்பாடி சமூகத்தைச் சேர்ந்த, 24 வயதாகும் பெண் சிந்து:
எங்கள் ஊரில் பெண்கள் அதிகமாக படிக்க மாட்டார்கள்; சிறு வயதிலேயே திருமணமாகி விடும். என் பெற்றோர் மட்டும் தான், நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
துணிகளில் பூ வேலை செய்வது எங்கள் குலத்தொழில். காலப்போக்கில் எங்க சமூக பெண்களும் விவசாய வேலை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது, எங்கள் ஊருக்கு வைத்தியம் பார்க்க பெண் மருத்துவர் ஒருவர் வந்தார்.
அவர், எங்களின் பழைய உடைகளில் இருந்த பூ வேலைகளை பார்த்து விட்டு, ‘இது சாதாரண வேலை இல்லை; பாரம்பரியம்’ என்று கூறி, 2006ல், ‘பொற்கை’ என்று ஓர் அமைப்பை ஆரம்பித்தும் கொடுத்தார். நான் உட்பட பெண்கள் பலரும், இரண்டு மூதாட்டிகளிடம் துணிகளில் பூ வேலை செய்வதை கற்றுக் கொண்டோம்.
எனக்கு உடையலங்காரம் குறித்த படிப்பில் ஆர்வம் இருந்ததால், ஓராண்டு வீட்டில் இருந்தே படித்து, அதற்கான நுழைவுத்தேர்வு எழுதினேன். இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்று, தேசிய உடையலங்கார தொழில்நுட்ப கல்லுாரியில் இடம் கிடைத்தது.
கல்லுாரிக்கு சென்றபோது, அனைவருமே ஆங்கிலத்தில் பேசினர்; நான் பேச ஆரம்பித்தாலே சிரித்தனர். ஒரு கட்டத்தில் வாயைத் திறக்கவே பயந்தேன். நாளடைவில் தைரியத்துடன் பேராசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.
நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு துணி வகைகள், உடையலங்கார வடிவமைப்புகள் என அனைத்தும் கற்றுக் கொண்டேன். என் கல்லுாரியில் சிறந்த வடிவமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.
படிப்பை முடித்த உடன், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், எங்கள் சமூக மக்களுக்கு நான் இல்லை எனில், வாழ்க்கையே இல்லை. அதனால், எங்கள் ஊருக்கே வந்து விட்டேன்.
‘பொற்கை’ அமைப்பின் மூலம், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து, பல வித ஆடைகளிலும் பூ வேலைகள் செய்ய ஆரம்பித்தோம். வெவ்வேறு மாநிலங்களில், ‘ஸ்டால்’ போட்டு, எங்கள் கலையை காப்பாற்றும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம். ஒருவர் கை பிடித்து ஒருவர் என எப்படியும் முன்னுக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்போது, எங்கள் ஊரில் இருந்து அடுத்தடுத்த இளைஞர்கள் தேசிய உடையலங்கார தொழில்நுட்ப கல்லுாரியில் படிக்க ஆரம்பித்துள்ளனர். திருப்பூர் மாதிரி, எங்கள் கிராமமும் ஒருநாள் ஆடை வடிவமைப்பு மையமாக மாறும்.
தொடர்புக்கு: 82489 69312
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்