சிதம்பரத்தில் 75 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 

சிதம்பரம் சுற்று வட்டார ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டு 1950ம் ஆண்டு ரத்தினசாமி செட்டியார், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலை என்ற பெயரில் ஆரம்பப்பள்ளியை நிறுவினார். 1953ம் ஆண்டு டிச., 5ம் தேதி சென்னை கல்வி அமைச்சர் சுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

1955ம் ஆண்டு பிப்., 24ம் தேதி பள்ளி நிர்வாகம் சார்பில் மதிய உணவுத் திட்டம் துவங்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 20ம் தேதி அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராஜ் பள்ளிக்கு வருகை தந்து பள்ளி நிறுவனரின் அறப்பணியைப் பாராட்டி பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.

கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலு, கிருபானந்த வாரியார், பள்ளிக்கல்வி இயக்குனர் சிட்டிபாபு, வெள்ளைவாரணனார் உள்ளிட்டோர் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 1971ம் ஆண்டு பள்ளி நிறுவனரின் மகன்கள் பாலசுப்பிரமணியன் பள்ளி தாளாளராகவும், ராமநாதன் தலைவராகவும், திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

1975ம் ஆண்டு நடந்த பள்ளியின் வெள்ளிவிழா சிறப்பாக நடந்தது. 1978ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1986ம் ஆண்டிலேயே இப்பள்ளியில் கம்ப்யூட்டர் லேப் நிறுவப்பட்டு சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்தினர்.

இப்பள்ளி மாணவர்கள் மேசைப்பந்து, பூப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாநில, தேசிய அளவில் பங்கேற்று வருகின்றனர். பள்ளியின் பொன்விழாவின் போது முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி நிறுவனர் ரத்தினசாமி செட்டியார் முழு உருவச்சிலையை, தருமை ஆதீன குருமகா சன்னிதானம் பள்ளி வளாகத்தில் திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்.

பொன்விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன், ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் நித்தியானந்தர், அகஸ்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். 2007ம் ஆண்டு இப்பள்ளியை நிறுவிய ரத்தினசாமி செட்டியாரின் நுாற்றாண்டு விழாவின்போது அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர் வெள்ளை வாரணனார், சத்தியசீலன், அறிவொளி உள்ளிட்டோர் உரையாற்றினர். 2010ம் ஆண்டு இப்பள்ளியின் வைரவிழா சிறப்பாக நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

2020ம் ஆண்டு முன்னாள் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி நினைவாக 10 கணினி கொண்ட புதிய கணினி மையம் இப்பள்ளியில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 1,200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இப்பள்ளி தமது சேவையை 75 ஆண்டுகள் நிறைவு செய்து பவள விழாவை கொண்டாடியது. பவளவிழாவில், எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் பேசினார். பவளவிழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் மாணவி அலமேலு 592 மதிப்பெண் பெற்று சிதம்பரம் நகரில் சிறப்பிடம் பிடித்தார். நான்கு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். -------

கல்வி சேவையில் முதன்மை

ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டு எங்களின் தந்தை ரத்தினசாமி செட்டியார் தொடங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலை பள்ளி 75 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எங்களது பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு உயர்ந்த பதவிகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு மன நிறைவை தருகிறது.ராமநாதன், பள்ளிக்குழுத் தலைவர். ---------மாணவர்களுக்கு தரமான கல்வி

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மீதுள்ள பக்தி காரணமாக 1950 ஆம் ஆண்டு, தமது சொந்த இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலை என்ற பெயரில் பள்ளியை நிறுவியது பாராட்டுக்குரியது. எந்தவித நன்கொடையும் இன்றி தகுதி அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியர்கள் நியமனம் இன்றளவும் நடந்து வருகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடிகிறது.

முத்துக்குமரன், முன்னாள் ஆசிரியர்

---------

தகுதியான ஆசிரியர்கள் நியமனம்

ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தகுதியான ஆசிரியர்களை நியமித்து கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவை ஆற்றி வருவது பாராட்டுக்குரியது. மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் அக்கறையுடன் செயல்படுகின்றனர்.

நடராஜன், முன்னாள் மாணவர்-------

Advertisement