ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கொடை கோரி முதல்வரிடம் மனு
புதுச்சேரி: புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்க தலைவர் மண்ணாங்கட்டி தலைமையில் நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, தங்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் பணிக்கொடையை விரைந்து வழங்கக் கோரி மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிக்கொடை மற்றும் 6-வது ஊதிய குழுவின் 50 சதவீத நிலுவைத் தொகையை வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து கடந்த 2025–26ம் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவீத ஊதிய நிலுவைத்தொகையான ரூ.2.33 கோடி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் இந்த தொகையை பெறுவதற்காக அனுப்பப்பட்ட கோப்புகள், நிதித்துறையால் 3 முறை திருப்பி அனுப்பப்பட்டு, இறுதியாக அந்தப் பணம் வேறு ஒரு திட்டத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் அந்த நிலுவைத்தொகை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை.
கடந்த 2003 முதல் மே 2019 வரை பணிசெய்து ஓய்வுபெற்ற பெரும்பான்மையான அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்குரிய பணிக்கொடை தொகையைப் பெற்றுவிட்டனர். அதேபோல், நீதிமன்ற வழக்கிற்குப் பிறகு அரசு எடுத்த முடிவின்படி, எல்.ஐ.சி., திட்டத்தின் கீழ் ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பணிக்கொடை வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், இடைப்பட்ட காலமான ஜூன் 2019 முதல் ஜூன் 2024 வரை பணிசெய்து ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டும் போதிய நிதி இல்லை என, காரணம் கூறி, இதுவரை பணிக்கொடை வழங்கப்படவில்லை. இதற்கு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, இக்கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோப்புகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் மற்றும் நிதி பெற்று விரைவில் தீர்வு காணப்படும் என, உறுதி அளித்தார்.