சோளம், கம்பு, தினை, வரகுக்கு முன்னுரிமை 'எல் நினோ'வால் விவசாயிகளுக்கு அறிவுரை
தலைவாசல்:'எல் நினோ' தாக்கம் ஏற்படும் என்பதால், சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை: பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் நிகழ்வே, 'எல் நினோ'. இது, உலகளாவிய வானிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, இந்திய பருவ
மழையை பாதிக்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டில், எல் நினோ தாக்கத்தால் பருவமழை சராசரியை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக, வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மழைப்பொழிவு குறைதல், அதிக வெப்பநிலை, நீண்ட வறட்சி காலம், நிலத்தடி நீர்மட்ட சரிவு, பாசன நீர் பற்றாக்குறை போன்ற சூழல்கள் உருவாகலாம். அதனால் விவசாயிகள் குறைந்த நீரில் வளரக்
கூடிய துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, எள்ளு போன்ற பயறு வகைகளை கணிசமாக சாகுபடி செய்தல் வேண்டும். சோளம், கம்பு, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு
தானிய பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சொட்டு நீர், தெளிப்பு பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக கையாள வேண்டும்.
எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய இழப்புகளை குறைக்க, விவசாயிகள் வானிலை முன் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, மாற்றுப்பயிர் மற்றும் நீர் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆகஸ்ட், செப்டம்பரில் விலை அதிகரிக்க இருப்பதால் தானியங்களையும், பயறு வகை பயிர்களையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.