கழிப்பிட வசதிக்கு கையேந்தும் அவலம் : ஊட்டி: அரசு தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்கு ஜப்பான் நாட்டினர் உதவி

3

ஊட்டி: அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, ஜப்பான் நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டமான டான் டீ செயல்பட்டு வருகிறது. இங்கு, பணிபுரிந்து வரும் தொழிலாளர் குடியிருப்பில் கழிப்பிட வசதி தொலை துாரத்தில் உள்ளது. இரவு நேரங்களில் யானைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், தொழிலாளர்கள் வன விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்கு அருகே கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர தொழிலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதை அறிந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், ஜப்பானை சேர்ந்த குருஜி மஷிகடேதீபக் அயோமா தலைமையிலான தன்னார்வலர்கள் வாயிலாக முதல் கட்டமாக, 11 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு, 8 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்பை ஒட்டி கழிப்பிடங்கள் கட்டி, தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

தன்னார்வலர்கள் அனைவரும் ஜப்பானிலிருந்து வந்து, கழிப்பிடங்களை திறந்து பயனாளிகளிடம் ஒப்படைத்து, அதனை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்கள்.

தொழிலாளர்கள் ஜப்பான் நாட்டினருக்கு நன்றி தெரிவித்தனர்.

சுகாதாரத்தை காக்கும் வகையில், துாய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ், சொந்தமாக கழிப்பறை இல்லாத ஏழை மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு தனிநபர் கழிப்பறை கட்டிகொள்ள மத்திய, மாநில அரசு இணைந்து, நிதி உதவி வழங்கி வருகிறது. இதை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கழிப்பறை வசதிக்கு ஜப்பான் நாட்டிடம் கையேந்த வேண்டிய அவல நிலை நீலகிரிக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement