சஹாரா பாலைவனத்தில் லாரி சிக்கியது; தண்ணீர் தாகத்தில் 50 பேர் பலியான சோகம்

16


நியாமி: நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதானதால், அதில் பயணித்த, 50 பயணியர், குடிக்க தண்ணீர் இல்லாமல், தாகத்தில் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், அண்டை நாடான மாலியில் உள்ள டெல்ஹாண்டெக் என்ற நகரில் நடந்த ஓர் ஆன்மிக விழாவில் பங்கேற்று விட்டு, லாரியில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அந்த லாரி, வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றதுடன், சஹாரா பாலைவனத்திற்குட்பட்ட வெகு தொலைவில் அமைந்துள்ள, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பழுதாகி நின்றது.

இதையடுத்து, அனைவரும் பல நாட்களாக அந்த லாரியை பழுது நீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், அதை அவர்களால் சரி செய்ய முடியவில்லை. கடும் வெப்பம் நிலவும் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட அவர்கள் அனைவரிடமும் இருந்த தண்ணீர் முழுதும் தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்ற பகுதியை சுற்றிலும் பல கி.மீ., துாரத்துக்கு நிழலோ அல்லது நீர் நிலைகளோ இல்லை.

லாரியை பழுது பார்க்கவும் முடியவில்லை. மேலும், தனிமைப்பட்ட பகுதி என்பதால், தங்களை காப்பாற்ற யாரும் வராத நிலையில், அந்த பயணியர் வெயிலை தவிர்ப்பதற்காக லாரிக்கு அடியிலும், அதை சுற்றிலும் நிழலைத் தேடி அமர்ந்திருந்தனர்.

இறுதியில், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், தாகம் தாளாமல் அவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் இருவர் மட்டும் நீர் நிலைகளை தேடி, அங்கிருந்து 50 கி.மீ., நடந்து சென்று, அருகிலிருந்த ஒரு நகரத்தை அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் பார்த்த போது லாரியில் பயணித்த பயணியர் பலியானது தெரியவந்தது.

Advertisement