கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி; ராம ரவிக்குமார் ஆவேசம்

24


சென்னை: 'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்பதில் ஹிந்துக்கள் உறுதியாக உள்ளனர்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என, மனுவில் எங்கும் கூறாத நிலையில், இதை ஒரு சதி திட்டமாக சித்தரிப்பது, கம்யூ., கட்சியின் அரசியல் கற்பனை.

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு, தீபம் ஏற்ற அனுமதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், உண்மைகளை திரித்து பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன் மீது, நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையே தொடரும்' என, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது, நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பொறுப்பற்ற செயல். வழக்கு நிலுவையில் உள்ளபோது, தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிப்பதுபோல், அமைச்சர் பேசுவது சட்டத்திற்கு எதிரானது. அவர் தன் கருத்தைத் திரும்பப் பெற்று, பொது வெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement