ஆரோக்கியம் என்பது வெறும் உணவல்ல அது வாழ்வியல்!
புதுக்கோட்டையில், இயற்கை அங்காடி மற்றும் உணவகம் நடத்தி வரும், 48 வயது பெண் நிஷா மைதீன்:
நான், எம்.பி.ஏ., - எம்.பில்., - எம்.எஸ்.டபிள்யூ., என பல முதுகலை பட்டங்களை முடித்து, கல்லுாரி விரிவுரையாளராக இருந்தேன்.
இன்று வெற்றிகரமான விவசாயி மற்றும் தொழில் முனைவோராகி இருக்கிறேன். 2017ல் ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுக்க பரவியது. அதுதான், என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எங்களிடம் இருந்த 5 ஏக்கர் தரிசு நிலத்தை செம்மைப்படுத்தி, இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். 'ஒன்றுக்கும் உதவாத நிலத்துல போய் இறங்குறாளே' என, பலரும் கேலி பேசினர். ஆனால், நான் பின்வாங்கவில்லை. நாட்டு மாடுகள், மண்புழு உரம் என, மூன்று ஆண்டுகள் அந்த மண்ணுடன் போராடினேன்.
இன்று, அதில் தென்னை முதல் சம்பங்கி பூக்கள் வரை செழிப்பாக விளைகின்றன. புதுக்கோட்டை டி.வி.எஸ்., ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள என் இயற்கை அங்காடியான, 'நிஷா ஆர்கானிக் ஸ்டோர் அண்டு ஹெல்த் கபே' நகரத்தின் புதிய ஆரோக்கிய அடையாளமாகவும் மாறியிருக்கிறது.
விளைபொருட் களை அடிமாட்டு விலைக்கு விற்க எனக்கு விருப்பமில்லை. எனவே, சூரிய ஒளியில் உலர வைக்கும், 'சோலார் டிரையர்' மூலம் காய்கறிகளை உலர்த்தி, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய துவங்கினேன்.
விவசாயம் செய்வதோடு இல்லாமல், நம் விளைபொருட்களை நாமே சந்தைப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன், மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்களை கற்றேன்.
என்னுடன் நின்று விடாமல், சுற்றுவட்டார பெண்களுக்கும், வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் வீடுகளில் விளையும் செம்பருத்தி, சங்குப்பூக்களை என்னிடம் கொடுத்து, பெண்கள் வருமா னம் ஈட்டுகின்றனர்.
என் உணவகத் தில் ஆரோக்கியமான தின்பண்டங்களுடன், பாரம்பரிய அரிசி, நாட்டு செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், காய்கறிகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும். நல்ல ஆரோக்கியமான உணவை, சுத்தமான சூழலில், சுவையாக கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
என் உணவகத்திற்கு அனைத்து வயதினரும் வருகின்றனர். இதை, என் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். ஆரோக்கியம் என்பது வெறும் உணவு அல்ல; அது ஒரு வாழ்வியல்.
இயற்கை அங்காடி மற்றும் உணவகத்தில் மாதம், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையும், அதில், 60,000 ரூபாய் லாபமாகவும் கிடைக்கிறது. பெண்கள் தொழில் துவங்கினால், ஆயிரம் தடைகள் வரும். அவற்றை கடந்து நம் லட்சியத்தை நோக்கி ஓடினால், வெற்றி நிச்சயம்.
தொடர்புக்கு:
99948 07068
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு