உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் ரூ.50 க்கும் கிடைக்கவில்லை

உசிலம்பட்டி: வைகை அணையின் வறட்சியால் உசிலம்பட்டி சேடபட்டி கூட்டுக்குடிநீர் விநியோகம் 15 நாட்களுக்கும் மேலாக தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீர் தேடி திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் கேன் விலை ரூ.50 க்கும் மேலாக உயர்ந்த போதிலும் போதுமான விநியோகம் இல்லாததால் தாகத்தில் தவிக்கின்றனர்.

உசிலம்பட்டியில் நிலத்தடி நீர் குடிக்க உகந்ததாக இல்லாததால் ஆண்டிபட்டி-, சேடபட்டி, உசிலம்பட்டி பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி நகருக்கு வைகையில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்த நிலையில், அங்குள்ள தண்ணீர் குடிக்க உகந்ததல்ல என குடிநீர் வடிகால் வாரியமே அறிவித்ததால் விநியோகம் நடக்கவில்லை. இதனால் இருவாரங்களாக உசிலம்பட்டி, சேடபட்டி, எழுமலை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. பொது மக்கள் சுத்திகரித்த குடிநீர் விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதுவரை ரூ.30 க்கு கிடைத்த குடிநீர் கேன் தற்போது ரூ. 50 க்கும் மேல் விற்கிறது. அதுவும் போதுமான சப்ளை இல்லை.

சுத்திகரிப்பு நிலையம் 2020 ல் ஊரக வளர்ச்சித் துறையில் மாநில நிதிக்குழு மானியத்தில் நக்கலப்பட்டி ஊராட்சி மாதரையில் எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 10லட்சம் செலவில் அமைத்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இங்கு ஊராட்சி மூலம் குடம் ஒன்றுக்கு ரூ.5க்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. பக்கத்து கிராமத்தினர் இங்கு குடிநீர் பெற்றுச் செல்கின்றனர்.

நக்கலபட்டி ஆனந்தபாபு கூறியதாவது: போர்வெல்களில் குடிநீர் குறைந்து வருகிறது. சுத்திகரித்த குடிநீர் விநியோகம் செய்வோர் தட்டுப்பாடு காரணமாக கிாமப்பகுதிகளுக்கு வருவதில்லை. எனவே 3 கி.மீ., துாரம் டூவிலரில் வந்து குடிநீர் பிடித்துச் செல்கிறோம். குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கிராமங்கள் தோறும் அமைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும் என்றார்.

Advertisement