ரேடியோவில் இருந்து மக்களின் மனம் வரை... மெர்சல் குரலில் மயக்கும் மெர்சி
சிறுவயதில் இருந்தே முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் இருந்தது. 10ம் வகுப்பில் பள்ளியில் 3வது இடம்பிடித்தபோது, 'ஏன் முதல் மதிப்பெண் பெறவில்லை' என பெற்றோர் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. உண்மையில் பள்ளியை விட்டு வெளியே வந்த பின் தான் எனக்கான வாழ்க்கை தொடங்கியது என்கிறார் மெர்சி ஜான். 'எந்த பள்ளியை விட்டு வெளியே வந்தால் போதும்' என நினைத்தாரோ, அதே பள்ளி அவரை அதன் தலைமை நிர்வாக பொறுப்பில் அமரவைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
சென்னையில் தனியார் ரேடியோவில் ஆர்.ஜே.,வாக இருந்தவர் அதிலிருந்து விலகி, கணவர் நிகேத் (சூரரைப்போற்று, டிராகன், டியூட் படங்களின் ஒளிப்பதிவாளர்) பரிந்துரையில், தனக்கென தனி ஸ்டைலில் வீடியோ பாட்காஸ்ட் நடத்தி வருகிறார்.
திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் என டப்பிங்கில் பிசியாக இருக்கும் மெர்சி கூறியதாவது: பள்ளி முதல்வர் பொண்ணு என்பதால் என்னை ஆசிரியராக பணியமர்த்தி சில ஆண்டுகளில் முதல்வராக்கலாம் என அப்பா திட்டமிட்டிருந்தார். எனக்கு கணக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதை, பிளஸ் 2 மதிப்பெண்களே சாட்சி. அப்பாவின் வற்புறுத்தலில் பி.எஸ்சி., கணிதம் படிக்க போனேன். எனக்கும் கணிதத்திற்கும் இடைவெளி அதிகமாக உள்ளதை பெற்றோரிடம் சொன்னேன். அவர்களோ, உனக்கு பிடித்த படிப்பில் சேரலாம்; அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டினர்.
ஊடகவியல் படிப்பில் சேர்ந்தேன். அது தான் எனக்கான இடம் என கல்லுாரியின் ஒவ்வொரு நாட்களுமே உணர்த்தின.
கல்லுாரி முடித்த பிறகு, சென்னையின் முதல் பாலிவுட் ஸ்டேஷனாக செயல்பட்ட தனியார் ரேடியோவில் 'மியூசிக் மேனேஜர்' வாய்ப்பு கிடைத்தது. பாடல்கள், விளம்பரங்கள், அன்றைய நிகழ்ச்சிகளுக்கான சவுண்டிங் வடிவமைப்பதை மியூசிக் மேனேஜர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என் அப்பா ராய்ப்பூரில் வளர்ந்தவர் என்பதால், பாலிவுட் பாடல்கள் எப்போதும் என் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும். அதனால் எனக்கு வேறு மொழி ரேடியோவில் பணியாற்றுகிறோம் என்ற உணர்வு எழுந்ததில்லை. பின் ஆர்.ஜே.,வாக 'லவ் 919' என்கிற இரவு ஷோ நடத்தினேன். ரேடியோவில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாத நிலை. 2020ல் ரேடியோவில் இருந்து விலகி, எல்லா விஷயங்களையும் பேசும் களமாக எனக்கென தனி பாட்காஸ்ட் உருவாக்கினேன்.
அப்பாவின் ஆசை
'எனக்கு பிறகு சென்னை பொன்னேரியில் உள்ள பள்ளியை நீ தான் கவனித்துக்கொள்ள வேண்டும்' என அப்பா சொல்லுவார். அப்போதெல்லாம் தட்டிக் கழித்த எனக்கு 2021ல் தந்தையை இழந்தபோது, உலகமே இருண்டதாக தோன்றியது. அந்த காலகட்டத்தில் உறுதுணையாக திரைப்பட ஒளிப்பதிவாளர் நண்பர் நிகேத் இருந்தார். பின்னாளில் காதலாக துளிர்விட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
பள்ளியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற போது, ஆசிரியர்களிடம் சற்று அதிகாரமாக பேசும் சூழல்கள் தர்மசங்கடத்தை தந்தன. ஆனால் ஒரு நிர்வாகியாக செயல்படும்போது, சில விஷயங்களில் சங்கடங்களை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும் என்பது தாமதமாகவே புரிந்தது.
திருமணத்திற்கு முன்பு வரை ஆடியோ வடிவில் பாட்காஸ்ட் வெளியிட்டேன். வீடியோ வடிவில் வெளியிட்டால் நிறைய பேருக்கு போய் சேரும்; அதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குகிறேன் என கணவரும் ஆதரவளிக்க 'டேட்ஸ் வாட் சி செட்' எனும் எனது பாட்காஸ்ட் பயணம் தொடங்கியது.வழக்கமான கேள்விகளாக இருக்காமல், பேட்டி தருபவரின் வாழ்க்கை, சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்வது போன்று பார்த்துக்கொள்வேன். முதல் சீசன் என் நண்பர்களை தான் அழைத்து பேசியிருப்பேன். நடிகை காயத்ரி சங்கர், ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் விக்கல்ஸ் விக்ரம், நிர்மல் பிள்ளை, அபிஷேக் உள்ளிட்டோருடன் முதல் சீசன் நிறைவடைந்தது.
டப்பிங் அனுபவம்
ரேடியோவில் பணியாற்றும்போதே, விளம்பரங்களில் டப்பிங் செய்யும் வாய்ப்புகள் வந்தன. டப்பிங் பொறுத்தவரை இது டப்பிங் என பார்வையாளர்கள் கண்டுபிடிக்காத வகையில் உங்கள் குரல் கதாப்பாத்திரத்தோடு பொருந்தியிருக்க வேண்டும். ராஜூமுருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படத்தில் கதாநாயகிக்கு டப்பிங் செய்த அனுபவம் மறக்க இயலாது. அதில் கர்ப்பிணி கதாநாயகி கலவரத்தில் சிக்கிக்கொள்வது போன்ற உணர்ச்சிகரமான காட்சிகள் டப்பிங் செய்ய சவாலாக இருந்தது.
அமேசான் பிரைம் 'மிர்சாபூர்' வெப்சீரிஸில் நடிகை ரசிகா துகலிற்கு டப்பிங் செய்தது சிறப்பான அனுபவம்.
பாட்காஸ்ட் தற்போது 4வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வீடியோவிற்கு நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். திரைத்துறை சார்ந்தவர்கள் வீடியோக்களுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பிற வீடியோக்களுக்கு கிடைப்பதில்லை. ஆனாலும் பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் பாட்காஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மெர்சி.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு