கிண்டிக்கு கட்டண ஸ்டேஜ் இல்லாததால் பயணியர் பாதிப்பு

மாமல்லபுரம்: கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில், கிண்டி நிறுத்தத்திற்கு கட்டண நிலை இல்லாததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்துார் உள்ளிட்ட பகுதியினர், பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை சென்று திரும்புகின்றனர்.

ஆனால், இந்த பேருந்துகளில் கிண்டி பகுதிக்கு கட்டண நிலை இல்லாததால், கூடுதல் கட்டணம் செலவால் பயணிர் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணியர் கிண்டி சென்று, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். மீண்டும் அங்கிருந்தே சொந்த ஊர் திரும்புகின்றனர்.

உதாரணமாக, மாமல்லபுரம் – திருவான்மியூருக்கு 42 ரூபாய் கட்டணம் பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது.

மாமல்லபுரம் – கிண்டி செல்ல கட்டணம் 65 ரூபாய். கோயம்பேடு வரையிலான கட்டணமே, கிண்டிக்கும் நீண்டகாலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கிண்டி வரை செல்லும் பயணியருக்கு, தினமும் 30 ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது.

கிண்டி – கோயம்பேடு இடையே 8 கி.மீ., துாரம் உள்ளது.

எனவே, பயணியர் நலன் கருதி, கிண்டிக்கு கட்டண நிலை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement