‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி கன்னியம்மன் நகரில் போராட்டம்
ஆவடி: கன்னியம்மன் நகரில் உள்ள, ‘டாஸ்மாக்’ மதுக்கடையை அகற்றக்கோரி, பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி அடுத்த பழைய கன்னியம்மன் நகர் பிரதான சாலையில், கடை எண்: 8929 அரசு மதுபான கடை மற்றும் ‘சாரல்’ என்ற பெயரில் மதுக்கூடமும் செயல்படுகிறது.
இந்த கடையில் இருந்து 100 மீ., துாரத்தில் கன்னியம்மன் நகர் பேருந்து நிறுத்தமும், 300 மீ., துாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
குடியிருப்பு பகுதியில் இயங்கும் இந்த மதுக்கடையால், பெண்கள், மாணவியர், பொதுமக்கள் என அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர்.
கடந்த வாரம், அவ்வழியாக சென்ற பெண் மீது, போதை ஆசாமி ஒருவர் மது பாட்டில் வீசியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற எதாவது ஒரு பிரச்னையை, மக்கள் சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள், இந்த கடையை மூடுவதற்கு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், நேற்று பிற்பகல் 12:00 மணியளவில் அக்கடையை முற்றுகையிட்டு, இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
717ல் ஒன்று இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரிமளம் என்பவர் கூறியதாவது: கன்னியம்மன் நகர் மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தால், மாலை வேளையில் பெண்கள் நடமாட முடிவதில்லை. கடந்த வாரம், இவ்வழியாக சென்ற பெண் மீது, போதை ஆசாமி ஒருவர் மது பாட்டில் வீசியுள்ளார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூடப்படும் என அரசு அறிவித்த 717 மதுபான கடைகளில், இந்த கடை உள்ளது. ஆனால், இதுவரை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, பிரச்னைக்குரிய இந்த கடையை மூட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆரோக்கியம் என்பது வெறும் உணவல்ல அது வாழ்வியல்!
-
மாநகராட்சியில் 'லாபி' அலுவலர்களின் விசுவாசிகள் சுத்தி சுத்தி வர்றாங்க: பணியிட மாற்ற உத்தரவிலும் மறைமுக 'அரசியலா'
-
குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே நடத்த அரசு உத்தரவு
-
பெண்கள், குழந்தை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: புதிய போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பேட்டி
-
ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்: சேதுராமன் சாத்தப்பன் தகவல்
-
உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் ரூ.50 க்கும் கிடைக்கவில்லை