அதியமான் நகர் சாலை சந்திப்பில் கொட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், அதியமான் நகர் சாலைச் சந்திப்பில், குப்பைத் தொட்டிகள் இல்லாததால், சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

அதியமான் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்களின் வீட்டு குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு இடமின்றி, சாலையோரங்களிலேயே கொட்டிச் செல்கின்றனர்.

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக வந்து குப்பைகளைச் சேகரிக்கும் நேரத்தில், வேலை மற்றும் இதர காரணங்களுக்காக வெளியில் செல்லும் குடும்பத்தினர் வீட்டில் இருப்பதில்லை.

அவ்வாறு துாய்மைப் பணியாளர்களிடம் நேரடியாக குப்பைகளை வழங்க முடியாதவர்களே, வேறு வழியின்றி இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் சாலை சந்திப்புகளில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.

எனவே, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வரும் நேரத்தில் வீட்டில் இல்லாதவர்களுக்காக, முக்கிய சந்திப்புகளில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். இதன் மூலம் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தடுக்கப்படும்.

எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், அதியமான் நகர் சாலை சந்திப்புகளில் போதிய குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement