அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்

7

புதுக்கோட்டை: ''மாற்றத்தை விரும்பிய தமிழக மக்கள், அ.தி.மு.க., -- தி.மு.க.,விற்கு மாற்று என்று நினைத்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தேர்தலில் அ.ம.மு.க., சார்பில் வென்ற எம்.எல்.ஏ.,வை காரில் வைத்து கையெழுத்து வாங்கி, அவர் த.வெ.க.,வை ஆதரிப்பதாக கூறி, கவர்னரிடம் கொடுத்தனர்.

அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரிடம், குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பது போல ஆசை வார்த்தை கூறி, ஆதரவை பெற்று கொண்டு, தற்போது அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட் டார் முதல்வர் விஜய்.

மாற்றத்தை விரும்பிய தமிழக மக்கள், அ.தி.மு.க., -- தி.மு.க.,விற்கு மாற்று என்று நினைத்து, த.வெ.க., என்ற ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

த.வெ.க., அரசு அறிவித்துள்ள இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன; இது ஏமாற்று வேலை.

போதைப்பொருள் கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட, கடந்த ஆட்சியில் நடந்தவை, அதைவிட இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்கும் வழியை த.வெ.க., அரசு பார்க்க வேண்டும். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பித்தலாட்ட வேலைகளை செய்யக்கூடாது.

த.வெ.க.,வினர் தேர்தலுக்கு முன்பு 'ரீல்ஸ்' போட்டார்கள். தற்போது ரியாலிட்டிக்கு வந்த பிறகும், 'ரீல்ஸ்' எடுபடாது. முதல்வர் விஜய் இன்னமும் தேர்தல் நேரத்தில் பேசியது போல 'டயலாக்' பேச வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement