பெனிபிட் பண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
முதலீட்டுக்கான காப்பீடு 5 லட்சம் ரூபாய் வரை இருப்பது தெரியும். இருப்பினும் சிறு நிதி வங்கிகளில் 20 லட்சம் ரூபாய் வரை வைப்பு நிதி வைப்பது உகந்ததா? 'எய்தர் ஆர் சர்வைவர், எனிஒன் ஆர் சர்வைவர்' சேமிப்பு கணக்குகளில், 40 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பாக வைக்க முடியும் என்று கூறப்படுவது குறித்து விளக்கவும். ஏ.பாலசந்தர், சென்னை. வங்கி திவால் ஆகிவிடுமோ என்ற பயத்தில் இருந்து தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. எனக்கு தெரிந்து கடந்த 30 ஆண்டுகளில் எந்த பெரிய வங்கியும், சிறு நிதி வங்கிகளும் மூழ்கி போனதில்லை. ஆனால், சிறு நிதி வங்கிகள் மீது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இல்லையெனில், அங்கே போக வேண்டாம்.
பணம் உங்களுடையது; அதை சேமிக்க பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு தான் தெரியும். அதனால், அதை எங்கே சேமிக்க வேண்டும் என்ற முடிவு உங்களுடையது.
எந்த இடத்தில் உங்கள் மொத்த முதலீட்டு தொகைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதுகிறீர்களோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.
'எய்தர் ஆர் சர்வைவர், எனிஒன் ஆர் சர்வைவர்' போன்ற கணக்குகளுக்கும் இதே தான் அடிப்படை விதிமுறை. இன்னொரு விஷயம், எப்போதும் பரவலாக முதலீடு செய்யுங்கள்; ஒரே இடத்தில் குவிக்க வேண்டாம்.
அதேபோல், நீண்ட காலத்துக்கு முதலீடும் செய்ய வேண்டாம். ஓராண்டு அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு நிதியை புதுப்பித்து கொள்ளுங்கள்.
தனியார் துறை தொழிலாளர்கள் 58 - 60 வயதில் ஓய்வுபெற்ற பின், வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேமித்து வந்த தொகையை திரும்ப பெறுவதற்கு, பணி ஓய்வுபெற்ற நாளிலிருந்து 60 நாட்களுக்கு பின் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த கால நிர்ணயம் சரியா? மேற்படி தொழிலாளர்களுக்கு எத்தனை நாட்களுக்குள் தொ.வை.நிதி அமைப்பு, சேமிப்பு தொகையையும் அதற்கான வட்டி தொகையையும் செட்டில் செய்ய வேண்டும்? ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி. பணி ஓய்வுபெற்ற தனியார் துறை தொழிலாளர்கள் தங்களின் பி.எப்., தொகையை திரும்ப பெற 60 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓய்வுபெற்ற அடுத்த நாளே முழு தொகையையும் எடுக்க அவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சட்ட விதிகளின்படி, 'ஆன்லைன்' வாயிலாக சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் 20 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய நவீன டிஜிட்டல் முறையில் சராசரியாக 3 - 8 நாட்களுக்குள்ளேயே பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஒருவேளை ஓய்வுபெற்ற பின்னும் தொகையை எடுக்காமல் கணக்கிலேயே வைத்திருந்தால், அதிகபட்சமாக 36 மாதங்கள் வரை அதற்குரிய வட்டி, கணக்கில் தொடர்ந்து சேர்க்கப்படும்.
வங்கிகளே வைப்பு நிதிக்கு 7 - 8 சதவீத வட்டி தான் தருகின்றன. ஒரு குறிப்பிட்ட பெனிபிட் பண்டு 10 சதவீதம் வழங்குவதாகவும், தற்போது 12 சதவீதம் கொடுப்பதாகவும் கூறுகின்றனர். அவர்களால் எப்படி முடிகிறது? நம்பி முதலீடு செய்யலாமா? கே.கண்ணன், சென்னை. அவர்களுக்கு நிர்வாக செலவு, இதர செலவுகள் குறைவாக இருக்கும். கொடுத்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப பெற முடிந்து, வாராக்கடனே இல்லாமல் இருக்கும்.
இன்னொரு பக்கம் அவர்களிடம் கடன் கேட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், அதை கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் போதிய நிதி ஆதாரமும் இல்லாமல் இருக்கலாம். அதனால், கூடுதல் வட்டி கொடுத்து, முதலீடுகளை ஈர்க்கின்றனர் என்று எடுத்து கொள்ளலாம்.
அந்த பெனிபிட் பண்டின் ஆண்டு வரவு - செலவு அறிக்கையை வாங்கி பாருங்கள். அவர்கள் எத்தகைய கடன்களை கொடுக்கின்றனர்.
அவற்றில் வாராக்கடன் எவ்வளவு, சம்பளம், இதர படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுகள் குறைவாக இருக்கின்றனவா என்றெல்லாம் பாருங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படுமானால், அதன் பின் முதலீடு செய்வதை பற்றி யோசியுங்கள்.
கிணத்துக்கடவு, மெட்டுவாவியில் நிலம் வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த நிலத்தை விற்பதாக இருந்தால், நிலத்திற்கு வரி கட்டி இருக்க வேண்டுமா, விற்பனை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்? சுப்புலட்சுமி, கோவை. உங்கள் நிலத்தை விற்க, உள்ளாட்சி நில வரியை நிலுவையின்றி முழுமையாக செலுத்தி, சமீபத்திய வரி ரசீதை வைத்திருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலான நிலம் என்பதால், மனை பிரிவாக இருந்தால் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்; கிராமப்புற விவசாய நிலமாக இருந்தால் வரி விலக்கு பெறலாம்.
விற்பனைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் இவை. உங்கள் பெயரிலுள்ள அசல் கிரைய பத்திரம் மற்றும் தாய் பத்திரங்கள், தற்போதைய ஆன்லைன் பட்டா, சிட்டா (விவசாய நிலமெனில் அடங்கல்).
கடந்த 15- - 30 ஆண்டுகளுக்கான தற்போதைய வில்லங்க சான்றிதழ், நிலத்தின் எல்லையை காட்டும் புல வரைபடம், உங்கள் ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் புகைப்படங்கள் இவற்றை தயார் செய்து, வாங்குபவருடன் விற்பனை ஒப்பந்தம் போட்ட பின், சார் - பதிவாளர் அலுவலகத்தில் 'ஆன்லைன் டோக்கன்' பெற்று நிலத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
என் மகளின் உயர் கல்விக்காக கடன் பெற்று, முழு தொகையை வட்டியுடன் கட்டி கடனை அடைத்து விட்டேன். 2025ல் மானியமாக வந்த 55,000 ரூபாயை, கல்விக்கடன் முடிந்து விட்டதால் பெற முடியவில்லை. மானிய தொகையை பெறுவதற்கான வழிகளை கூற வேண்டுகிறேன். என்.ரவிச்சந்திரன், சிறுமுகை. உங்கள் மகளின் வங்கி கணக்குக்கு தான் அந்த மானிய தொகை வரும். நீங்கள் ஏற்கனவே கடனை அடைத்து விட்டீர்கள் என்பதால், அந்த பணத்தை ஏதேனும் ஒரு தனிக்கணக்கில் சேர்த்து வைத்திருப்பர். அதனால், வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு, எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கள்.
அதில், உங்கள் மகளுக்கு மானியம் வந்த தகவலை சொல்லி, தற்போது கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட்டதால், சேமிப்பு கணக்குக்கு அந்த பணத்தை வரவு வைக்க சொல்லுங்கள்.
அவர்கள் மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ, அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு 'இ - மெயில்' எழுதி புகார் அளியுங்கள். அப்படியும் ஏதும் நடக்கவில்லை என்றால், குறைதீர் ஆணையரிடம் முறையிடுங்கள்.
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?