கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு: ஹிந்து சமய அறநிலையத்துறை தகவல்

6

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய, 'ஆன்லைன்' வழியே முன்பதிவு செய்யும் வசதி, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சுவாமி தரிசனம் முதல் அனைத்து சேவைகளிலும் முறைகேடு நடந்து வருகிறது. சமீபத்தில், திருச்செந்துார் முருகன் கோவிலில், மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடமே, கோவில் ஊழியர்கள் லஞ்சம் பெற்றனர். இந்த விவகாரம் பூதாகரமானதும், கோவில் ஊழியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஆனாலும், பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்கிறது.

இந்நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய, 'ஆன்லைன்' வழியாக முன்பதிவு செய்யும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
திருச்செந்துார் கோவிலில் நடந்த நிகழ்வு, ஒட்டு மொத்த துறைக்குமே பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. இதைச் சரிசெய்ய, துறை ரீதியிலான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, தமிழகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில், 'ஆன்லைன்' வழியே தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த, அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற நடைமுறை, திருப்பதி கோவிலில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@ தங்கும் அறைகளுக்கும் முன்பதிவு தேவை

ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், மருதமலை, ஸ்ரீரங்கம் உட்பட பல கோவில்களில், தேவஸ்தானத்துக்கு சொந்தமாக, பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் உள்ள அறைகளை, 'ஆன்லைன்' வழியே முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

அத்துடன், எந்த கோவில்களிலும், இந்த திட்டம் நடைமுறையில் இல்லை. குறிப்பாக, நேரில் சென்று தேவஸ்தான அறைகளை கேட்டாலும், அங்கிருக்கும் ஊழியர்கள் கொடுப்பதில்லை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, அறைகள் கிடைக்கும் நிலை உள்ளது. இல்லையெனில், தனியார் விடுதிகளில், அதிக பணம் கொடுத்து தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது, தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் திட்டத்தை, துறை அமைச்சர் ரமேஷ் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதேபோல, தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும், 'ஆன்லைன்' முன்பதிவை கொண்டு வந்தால், பக்தர்கள் பயன் அடைவர்.block_B

Advertisement