கல்வித்துறையில் 'பசை'யாய் ஒட்டிய அலுவலர்கள் 3 ஆண்டுகளை கடந்தும் கோலோச்சுவதாக சர்ச்சை

மதுரை: கல்வித்துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அதிகாரிகள் சிபாரிசால் 'பசை போல்' அவர்கள் ஒரே இடத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதால் மாறுதல் எதிர்பார்த்து காத்திருக்கும் பிற அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மாநில அளவில் கல்வி அலுவலகங்களில் 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் ஆகியோருக்கு ஆசிரியர்கள் போல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை மாறுதல் செய்ய வேண்டும் என விதி உள்ளது.

ஆனால் விதிமீறி பலர் ஒரே இடத்தில் 4 ஆண்டுகளை தாண்டியும் பணியில் நீடிக்கின்றனர். 'வசதி'யான அலுவலர்கள் அதிகாரிகளின் சிபாரிசு மூலம் வேண்டிய இடத்திற்கு மாறுதல் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் இடமாறுதல் கலந்தாய்வு நடக்காதது, 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிப்போரை மாற்றும் விதியை பின்பற்றாதது போன்றவற்றால், பாதிக்கப்பட்ட அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கல்வித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றினால் முறைகேடு நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். ஆனால் விதிகளை மீறி அதிகாரிகள் சிபாரிசு மூலம் அவர்கள் அதே இருக்கையில் தொடர்கின்றனர்.

மதுரை உட்பட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் இதுபோன்றோர் எண்ணிக்கை அதிகம் உள்ளன. கல்வி அலுலர்களுக்கான கலந்தாய்வு ஜூனில் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு நடப்பதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டிக்கொண்டுள்ளோரை பணியிட மாற்றம் செய்யஇயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ் உத்தரவிட வேண்டும் என்றனர்.

Advertisement