சுவையான ‘டிராகன் புரூட்’டில் சூப்பரான லாபம்!

–––––––––

‘டிராகன்’ பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து, நல்ல லாபம் ஈட்டும், தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த, 33 வயதாகும் பெண் முல்லை:

இதுதான் என் சொந்த ஊர். நான் பொறியியல் இளங்கலை, கணினி அறிவியல் படித்தேன். திருமணம் ஆனதும், சென்னையில் வசித்தோம். அங்கு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தேன். கணவருக்கும், எனக்கும் பரபரப்பான வாழ்க்கை முறை சலிப்பை ஏற்படுத்தியது. அதனால், வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயம் செய்யலாம் என்று முடிவெடுத்து, சொந்த ஊருக்கே வந்து விட்டோம்.

இங்கு, 2.5 ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். டிராகன் புரூட்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், விற்பனை வாய்ப்பும் அதிகம் இருக்கும் என தெரிந்ததால், இதையே பயிர் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

டிராகன் புரூட் வறட்சியான பகுதிகளிலும், செழிப்பாக வளரக்கூடிய பயிர். நாங்கள் சாகுபடியில் இறங்கும் முன், விவசாயிகள் சிலரிடம் பேசி, தகவல்களை தெரிந்து கொண்டோம்.

அதன்பின், 7 அடி உயரத்தில் கல் துாண்களை அமைத்து, தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்து, அவை வளர்ந்ததும் கல் துாண்களில் கொடிகளை படர விட்டோம். இதை சாகுபடி செய்வதற்கான முதலீடு அதிகம் என்றாலும், ஒருமுறை பயிர் செய்து விட்டால், 20 ஆண்டுகளுக்கு மேல் வருமானம் ஈட்டலாம்.

நடவு செய்த ஒன்றரை ஆண்டில் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். கடந்தாண்டு, 1.5 ஏக்கர் பரப்பில் மொத்தம், 5 டன் பழங்கள் மகசூல் கிடைத்தது. ஆரம்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் என்று விற்பனை செய்தோம்.

இயற்கை முறையில் விளைந்த பழங்கள் என்பதால், பலரும் விரும்பி வாங்கினர். சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஒரு கிலோவுக்கு சராசரியாக, 100 ரூபாய் வீதம், 5 லட்சம் ரூபாய் வருமானமும், அனைத்து செலவுகளும் போக, வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது.

டிராகன் புரூட்டுக்கு ஜூன் முதல் நவம்பர் வரை சீசன். ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக பழங்கள் கிடைக்கும்; அடுத்த ஆறு மாதங்கள், அடுத்தாண்டு நடவுக்கான பராமரிப்பு வேலைகள் செய்வோம். டிராகன் பழங்கள், இயற்கை விவசாயத்தில் நன்றாக விளையும். பூச்சி, நோய் பாதிப்புகள் அதிகம் இல்லாமல், செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து, செழிப்பான விளைச்சல் கொடுக்கிறது. பழங்கள் சுவையாகவும் இருப்பதால், எளிதாக விற்பனை செய்ய முடிகிறது.

தொடர்புக்கு: 87609 24723.

***

Advertisement