புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்

10

புதுடில்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா, 49, மாரடைப்பால் காலமானார்.

இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா. இவருக்கு வயது 49. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள இவர், மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி போன்ற திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்சமாக 15 பதக்கங்களை வென்று இருக்கிறார். இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு 1994ல் அர்ஜுனா விருதும், 1997ல் பத்மஸ்ரீ விருதும், 2020-ல் துரோணாச்சார்யா விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

ஜஸ்பால் ராணா, ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து திரும்பும்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அந்தப் போட்டியில் இந்திய அணி, இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி உட்பட நான்கு பதக்கங்களை வென்று அசத்தியது. டில்லி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் ஜஸ்பால் ராணா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனைகளில் ஸ்டென்ட் பொருத்த வேண்டிய அவசியம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. தன் 49ம் வயதில் ஜஸ்பால் ராணா காலமானார்.




பிரதமர் மோடி இரங்கல்





ஜஸ்பால் ராணா மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


ஜஸ்பால் ராணா மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அவர் நிகழ்த்திய சிறப்பான சாதனைகள் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

இளம் விளையாட்டு வீரர்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் வழிநடத்தி அவர்களைச் செதுக்கியதில் அவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான சேவை ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத ஈடுபாடு அவருக்குப் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

இந்த துயரமான நேரத்தில் ஜஸ்பால் ராணாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுச் சமூகத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement