தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ்பேனர்களால் விபத்து அபாயம்
தேனி:தேனி பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்கிறது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று அதிக வேகத்தில் வீசுவதால் பிளக்ஸ்கள் கிழிந்து தொங்குகின்றன. அவை வாகனங்களில் வருவோர் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.இதனை உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர்.
தேனி -பெரியகுளம் ரோடு தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் முகூர்த்த நாட்களில் ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ்கள் வைக்கின்றனர். இவற்றை பல நாட்களாக அகற்றுவதில்லை. அவை காற்றில் கிழிந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது. அதே பகுதியில் அல்லிநகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் பிளக்ஸ் பேனர்களால் ஏற்படும் இடையூறுகளை கண்டும் காணாமல் உள்ளனர். பிளக்ஸ் பேனர்களால் அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார், உள்ளாட்சி நிர்வாகங்கள் பேனர் வைப்பதை தடுக்க மண்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.