பரமக்குடியில் மினி பஸ்சுக்கு ஸ்டாப் எங்கே தான் இருக்கு.. வாகன ஓட்டிகள் எரிச்சல்
பரமக்குடி: பரமக்குடியில் மினி பஸ்கள் நிறுத்த ஸ்டாப் வரையறுக்கப்படாததால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் எரிச்சலுாட்டும் பயணம் செய்கின்றனர்.
பரமக்குடி நகராட்சி வளர்ந்து வரும் நகராக இருக்கிறது. இங்கு 36 வார்டுகள் இருந்தாலும் அருகில் குடியிருப்புகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கிராம பகுதிகளுக்கு மட்டுமல்லாது, 5 கி.மீ., சுற்றளவு வரையும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் நிம்மதியாக குறைந்த செலவில் நகருக்குள் வந்து செல்ல உதவியாக உள்ளது.
ஆனால் பஸ் ஸ்டாண்ட் துவங்கி ஆர்ச், ஐந்து முனை, ஓட்ட பாலம் செல்வதற்குள் மக்கள் கை காட்டும் இடங்களில் எல்லாம் மினி பஸ்களை நிறுத்துகின்றனர். இந்த நிலை அனைத்து ரோடுகளிலும் தொடர்கிறது. இதன் காரணமாக பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. கொளுத்தும் வெயில், மழை நேரங்களிலும் இச்சூழல் தொடர்வதால் எரிச்சல் அடைகின்றனர்.
மேலும் தற்போது பள்ளி நாட்களிலும் பஸ்களை மாட்டு வண்டி வேகத்தில் இயக்கி செல்வதால் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். ஆகவே மினி பஸ்களுக்கு என குறிப்பிட்ட ஸ்டாப் ஒதுக்கி பயணிகளுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஆபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள போக்குவரத்து போலீசார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.