சுவர் ஏறி குதித்து டி.ஆர்.ஐ., அலுவலகத்தில் ஆவணங்களை திருட முயன்ற 4 பேர் கைது

1

தேனாம்பேட்டை:சுவர் ஏறி குதித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், ஆவணங்களை திருட முயன்ற, நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில், டி.ஆர்.ஐ., எனும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு, கடந்த 31-ம் தேதி அதிகாலை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, காவலாளி ஜான் கென்னடியை தாக்கினர். கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்தனர்.

தாக்குதலால் காவலாளி மயக்கமடைந்தார். பின், மயக்கம் லேசாக தெளிந்த நிலையில், அங்கு வந்த டி.ஆர்.ஐ., அதிகாரிகள், கட்டுகளை அவிழ்த்து விட்டு விசாரித்தனர்.

சமீபத்தில், தங்கக் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த, ஆவணங்களை மர்ம நபர்கள் திருட முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், காலவாளி ஜான் கென்னடி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, சுவர் ஏறி குதித்து இருவர் அலுவலகத்திற்குள் செல்வதும், பின் வெளியே வந்த அவர்களுடன், மேலும் இருவர் சேர்ந்து ஆட்டோவில் தப்பிச் செல்வதும் தெரிந்தது.

ஆட்டோ எண்ணை வைத்து, அதன் ஓட்டுநரான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரிடம் விசாரித்தனர். சம்பவத்தன்று நால்வரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, அதற்கான தொகையை பண பரிவர்த்தனை செயலியான 'கூகுள் பே' மூலம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

அவர், கேரளாவைச் சேர்ந்த அனுப், 33, என்பது தெரிந்தது. மொபைல் போன் டவர் சிக்னல் மூலம் தேடியதில், நால்வரும் தஞ்சாவூரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து, நால்வரையும் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், காரைக்காலைச் சேர்ந்த அப்துல் ஹாடி, 24, கேராளவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அனுப், 33, பாலக்காட்டைச் சேர்ந்த ஆதித்யன், 20, கொல்லத்தைச் சேர்ந்த சிம்லால், 53, என்பது தெரிந்தது.

நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு முகமூடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

***

Advertisement