அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
- நமது நிருபர் -
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், புதிய எண்கள் வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'சிம் கார்டுகள்'
இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோரின் மொபைல் எண்களை, சமீபத்தில் அரசு வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, அந்த எண்களுக்கு, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதனால், அமைச்சர்கள், அதிகாரிகள், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அவர்களுக்குள் பேசிக் கொள்வதற்கென, தனி மொபைல் எண்களை, பி.எஸ்.என். எல்., நிறுவனத்திடம் இருந்து, துறை வாரியாக வாங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, புதிய எண்களை தேர்வு செய்து வழங்கி வருகிறோம். புதிதாக வழங்கப்படும், 'சிம் கார்டுகள்' அனைத்தும், சி.யூ.ஜி., அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
வெளியிடப்படாது
இதன் வாயிலாக, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், தங்களுக்குள் எந்த தடங்கலும் இல்லாமல், தொடர்பு கொள்ள முடியும். இந்த எண்கள், எக்காரணம் கொண்டும் பொதுவெளியிலோ அல்லது அரசு இணையதளங்களிலோ வெளியிடப்படாது. இது முழுக்க முழுக்க உள் வட்டார நிர்வாக பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறந்த நகைச்சுவை