வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட தாண்டிக்குடி ஊராட்சி

1

தாண்டிக்குடி:கொடைக்கானல் மலைப்பகுதியில் தாண்டிக்குடி சுற்றுலாத்தலங்கள், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகும்.

அம்பேத்கர் காலனி, இந்திரா நகர்,கூடம் நகர், பட்லங்காடு,கடுகுதடி,அம்மா நகர்,கொட்டகொம்பு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடிக்கிய இந்த ஊராட்சியில் சேதமடைந்த ரோடுகளால் மக்கள் தினமும் பரிதவிக்கின்றனர். துார்வாரப்படாத சாக்கடையால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் புகலிடமாக உள்ளது. சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளையால் தொற்றுக்கு வழி வகுக்கிறது . ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது .அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் இருளில் தத்தளிக்கின்றனர். இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் தினமும் தொடர்கிறது .சரி வர அள்ளப்படாத குப்பையால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது .விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பங்கள்,காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்துடன் வசிக்கும் நிலை தொடர்கிறது . தாண்டிக்குடியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மருதாநதி ஆற்றில் விவசாய தேவைக்காக பம்ப்செட் அமைத்து தண்ணீர் எடுக்கும் போக்கால் ஊராட்சியில் தற்காலிக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தெருக்களில் ஆங்காங்கே குப்பை அள்ளபடாமல் சுகாதாரக்கேடாக உள்ளது. என்.எஸ்.எஸ்., தெருவில் வளர்ச்சி பணிகள் செய்யப்படவில்லை.ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் போர்வெல் தண்ணீர் முறையாக பொதுமக்களுக்கு சப்ளை செய்யாமல் தனி நபர்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் பைப் லைன்கள் பயனற்று அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது இதில் நடந்துள்ள முறைகேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஊராட்சியில் உள்ள குடிநீர்த் தொட்டிகள் தூய்மை படுத்தாமல் சுகாதார கேடாக உள்ளது. கூடம்நகர் ரோடு சேதமடைந்து வாகனங்கள் சென்றுவர முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இதோடு சரிவர இயக்கப்படாத தனியார் பஸ்கள்,பராமரிக்கப்படாத சுகாதார வளாகங்கள் என ஏராளமான பிரச்னைகள் இங்கு உள்ளன.

..

குடிமகன்கள் பாராக சமுதாயக்கூடம்

லட்சுமணன், இயற்கை ஆர்வலர்: தாண்டிக்குடி ஊராட்சியில் 1960 ல் கட்டமைக்கப்பட்ட குடிநீர் திட்டமே தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முருகன் கோயில் தெருவில் ரோட்டில் ஓடும் சாக்கடையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மருதாநதி ஆற்றோரம் தடுப்புச்சுவர் ஏற்படுத்தாமல் கனமழையின் போது ரோட்டில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தெரு நாய் பிரச்னையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சமுதாயக் கூடத்தை குடிமகன்கள் பாராக பயன்படுத்துவதால் குடியிருப்போர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.எருது குத்திகல் பகுதியில் உள்ள தரைப்பால மேல் பகுதி சேதமடைந்து நாள்தோறும் பொதுமக்கள் விபத்தில் சிக்கின்றனர்.

கீழ் பஸ் ஸ்டாப் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரேஷன் கடைப்பகுதியில் கழிவுநீர் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசிகிறது. ஊராட்சியில் குறைகள் குறித்து கூறும் நிலையில் ஊராட்சி செயலாளர் கண்டு கொள்வதில்லை. கொட்ட கொம்பு, பட்லாங்காடு கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் சூழ்ந்து மின் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஊராட்சி செயல்பாடின்றி உள்ளது.தாண்டிக்குடி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சரிவர எரியாத தெருவிளக்குகள்

கருப்புசாமி, வியாபாரம் : ஊராட்சி பகுதியில் உள்ள ரோடுகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டு, குழியுமாக உள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது. சரிவர குடிநீர் சப்ளையாகாதது, குடிநீர் குழாய்கள் பூமிக்கடியில் சேதமடைந்து வீணாவது என குடிநீர் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது. இதற்கு புதிய குழாய் அமைத்து குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். கரியமால் கோயில் தெருவில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க அளவீடு செய்த நிலையில் இதுவரை அமைக்கவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத நிலையில் செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். கரியமால் கோயில் தெருவில் குப்பை சரிவர அள்ளப்படாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பயனற்று சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது.



தனி அலுவலர் மூலம் கண்காணிப்பு



சுவாமிநாதன், பி.டி.ஓ., கொடைக்கானல் : உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தனி அலுவலர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து ஒரு வாரத்திற்குள் தாண்டிக்குடி ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement