10ம் வகுப்பு துணைத்தேர்வு 2,096 பேர் விண்ணப்பம்
உடுமலை: கடந்த மே 20-ம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 29 ஆயிரத்து 13 பேரில், 27 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,080 பேர் தேர்ச்சி பெறவில்லை.
அவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வுக்கு கடந்த மே 27- முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்த நிலையில், பள்ளி மாணவர்கள் 1,205 பேரும், தனித்தேர்வர்கள் 891 பேரும் என மொத்தம் 2,096 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விபரங்கள் பாடவாரியாக சேகரிக்கப்பட்டுள்ளன.
துணைத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், மாணவர்கள் நேரடியாக பிளஸ் -1 வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, மாணவர்கள் துணைத்தேர்வை தவறாமல் எழுதுவதுடன், அவர்களுக்கு பெற்றோர்களும் உரிய ஊக்கமும் ஆதரவும் வழங்க வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.