இதே நாளில் அன்று

ஜூன் 10:

வயலின் இசை கலைஞர் பரூர் சுந்தரம் அய்யர் - பாகீரதி தம்பதியின் மகனாக, சென்னை, மயிலாப்பூரில், 1931ல் இதே நாளில் பிறந்தவர், மயிலாப்பூர் சுந்தரம் கோபாலகிருஷ்ணன் எனும் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இவர், தன் 4 வயதிலேயே, தந்தையிடம் வயலின் கற்றார். தென் மாநிலங்களின் கர்நாடக இசை மற்றும் வட மாநிலங்களின் ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். கடுமையான பயிற்சிகளை செய்து, வேகமாகவும், துல்லியமாகவும் வயலின் வாசிக்க கற்ற இவர், 8 வயதிலேயே தனியாக கச்சேரி செய்தார்.

ஒரே விரலால் வாசிப்பது, ஒரே தந்தியில் பல ஸ்ருதிகளை கையாள்வது என தனி பாணியை உருவாக்கினார். தன் அண்ணன் எம்.எஸ்.அனந்தராமன், மகள் நர்மதா ஆகியோருடனும் இணைந்து கச்சேரிகள் செய்தார். அரை நுாற்றாண்டாக இவர் பின்பற்றிய இசை பாணி, 'பரூர் பாணி'யாக இன்றும் புகழ் பெற்றுள்ளது.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகியவற்றுடன், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 81வது வயதில், 2013, ஜனவரி 3ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement