சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்க மற்றொரு அரசு மருத்துவமனை
பெங்களூரு: பெங்களூரில் சிறுநீரக சிகிச்சைக்கு, மற்றொரு மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக யஷ்வந்த்பூரில் இடம் அடையாளம் காணப்படுகிறது.
இது குறித்து, மருத்துவ கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து, பெங்களூரின், விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில், சிறுநீரக சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இது 160 படுக்கைகள் வசதி கொண்டதாகும். டயாலிசிஸ் உட்பட, பல்வேறு சிகிச்சைக்காக மாநிலத்தின் பல இடங்களில் இருந்து, நோயாளிகள் வருகின்றனர். தினமும் இங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, 'டயாலிசிஸ்' செய்யப்படுகிறது.
இந்த மருத்துவமனை மீதான அழுத்தத்தை குறைக்கவும், நோயாளிகளின் வசதிக்காகவும், சிறுநீரக சிகிச்சைக்கு மற்றொரு மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. யஷ்வந்த்பூரின், சஜ்ஜேபாளையாவில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இங்கு மருத்துவமனை கட்ட, அமைச்சரவையில் ஒப்புதலும் கிடைத்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் மருத்துவமனையில், அனைத்து வசதிகளும் இருக்கும்.
திட்டத்துக்கு தேவையான ஐந்து ஏக்கர் நிலத்தில், மூன்று ஏக்கர் நிலம் மருத்துவ கல்வித்துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தை ஒட்டியுள்ள, சமூக நலத்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம், மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இங்கு மருத்துவமனை கட்டப்பட்டால், பெங்களூரு வடக்கில் மருத்துவ சேவைகள் விரிவடையும். பெங்களூருக்கு அப்பால் உள்ள துமகூரு உட்பட, பல இடங்களில் உள்ள நோயாளிகளுக்குஉதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.