பறிமுதல் வாகனங்களால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

ஓசூர்:ஓசூரில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், மகளிர் ஸ்டேஷன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஸ்டேஷன், நிலவரித்திட்ட அலுவலகம் ஆகியவை, ஒரே வளாகத்தில் உள்ளன.


இதனால் இங்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரால், விபத்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஒருங்கிணைந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள், தங்களது இரு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த இடவசதியின்றி தவிக்கின்றனர். காரில் வந்தால் திரும்பி செல்வது கூட சிரமமாகி விடுகிறது. மேலும், ஒருங்கிணைந்த வளாகத்திற்குள், பள்ளி மாணவ, மாணவியருக்கு முட்டைகள் அனுப்ப குடோன் உள்ளது. இதுதவிர, அரசு பணிகளுக்கான சிமென்ட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கூட, வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, உரிய முறையில் பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்தி, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement