திருப்புவனத்தில் தனியார் குடோனாக மாறிய அரசு பஸ் கிளை அலுவலகம்

திருப்புவனம்:திருப்புவனம் அரசு பஸ் டெப்போவில் தனியாருக்கு சொந்தமான பொருட்களை இறக்கி வைத்து வாகனங்களில் மாற்றி ஏற்றி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்திற்கு சொந்தமான கிளை பணிமனை திருப்புவனம் அருகே மடப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள் உள்ளனர். இங்கு பஸ் பழுதுபார்க்கும் மையமும் உள்ளது. நேற்று பஸ் டெப்போ வளாகத்தில் தனியார் சோலார் நிறுவனத்திற்காக ராட்சத கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக லிப்ட் இயந்திரம் மூலம் இறக்கி வைக்கப்பட்டன. சோலார் நிறுவனத்திற்கு செல்லும் பாதை மேடு பள்ளமுமாக இருப்பதால் ராட்சத கண்டெய்னர் செல்ல முடியாது என்பதால் கண்டெய்னரில் உள்ள பொருட்களை அரசு பஸ் டெப்போவில் கொண்டு வந்து இறக்கி வைத்து சிறிய லாரிகளில் லிப்ட் வாகனம் மூலம் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. அரசு பஸ் டெப்போவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை இறக்கி வைத்தது ஏன் என தெரியவில்லை. அரசு பஸ் டெப்போவில் எந்த வாகனம் வந்தாலும் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள் இன்றி தனியார் வாகனங்களில் பொருட்களை ஏற்றினர்.

இது குறித்து கிளை மேலாளர் உமாகண்ணன் கூறியதாவது,

ராட்சத கண்டெய்னர்கள் செல்ல போதிய பாதை வசதி இல்லாததாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலும் டெப்போவில் பொருட்களை இறக்கி வைத்து சிறிய வாகனங்களில் மாற்றி கொண்டு சென்றனர், என்றார்.

//

Advertisement