வைக்கோல் கட்டுக்குள் கஞ்சா பதுக்கல் தம்பதியர் உட்பட 3 பேர் கைது

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஆய்வு நடத்திய தனிப்படை போலீசார் மாட்டுத்தீவன வைக்கோல் கட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தம்பதியர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே கொட்டாரப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். கொட்டாரபட்டி ஆட்டோ டிரைவர் ஜெயபால் 45, வீட்டில் மாடுகளுக்கு தீவனத்திற்காக சேகரிக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளுக்குள் இரு மூடைகளில் 56 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்த போலீசார் ஜெயபால், அவரது மனைவி நந்தினி 37, உடந்தையாக இருந்த நத்தம் ஊராளிபட்டி சேர்ந்த சையதுகாட்டுபாவா 37, ஆகியோரை கைது செய்தனர். எஸ்.பி., பிரதீப் கூறுகையில், கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, இவர்களிடம் வாங்கிய சில்லரை விற்பனையாளர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

Advertisement