அரசியல்  நாகரிகம் இல்லாத பேச்சுக்களை அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும் கரூர் எம்.பி., ஜோதிமணி காட்டம் 

திண்டுக்கல்: தி.மு.க.,வின் அனிதாராதாகிருஷ்ணன் அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார். அவரது அரசியல் விமர்சனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் '' என கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: டில்லி இளைஞர்கள் போராட்டத்தில் கண்ணீர் புகை அடித்து காவல்துறை அடக்குமுறையை கையாள்கிறது. எங்களை பொறுத்தவரை கட்சிக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் போராடுவதை பார்க்கிறோம். தி.மு.க., இண்டி கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். வரும் காலத்தில் நமக்குள் வேறுபாடுகளை எல்லாம் மறந்து ஒரே கூட்டணியாக , எதிர்கட்சியின் கூட்டமைப்பாக செயலாற்ற வேண்டும்.

அனிதா ராதாகிருஷ்ணன் அரசியல் நாகரீகம் அற்றவர். தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கிறோம். கூட்டணியில் இருந்தபோது ஆகா.. ஓகா...என புகழ்ந்துவிட்டு கூட்டணியில் இல்லை என்றதும் கண்டபடி துாற்றுகிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் அரசியல் விமர்சனங்களை கட்டுப்படுத்த வேண்டும். அவர் கட்டுப்படுவார் என நம்புகிறேன். நாங்கள் கேரளாவில் கம்யூ., கட்சியை எதிர்த்து தீவிரமாக பணியாற்றினோம். மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்., கட்சியை எதிர்த்து போட்டியிட்டோம். ஆனால் அவர்கள் கூட்டணிக்கு வந்துவிட்டார்களே. அந்த மாதிரியான சூழல் வர வேண்டும். வரும் என நான் நம்புகிறேன் என்றார்.

Advertisement