பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அனைத்து விமானங்களும் பயன்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் சூறையாடப்பட்டன. ஆனால், இந்த தாக்குதலில் இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு ஊடகங்களும் கூறி வந்தன.
ஆனால், இது பொய் என நிரூபிக்கும் வகையில் விமானப்படைகள் பல்வேறு விளக்கங்களை அளித்து வந்தது. இந்த நிலையில், இந்தியாவிடம் இருக்கும் அனைத்து ரபேல் போர் விமானங்களும் பயன்பாட்டில் இருப்பதாக விமானப்படை கூறியிருப்பது பாகிஸ்தானின் பொய்யை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
அதாவது, 2016ம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரபேல் போர் விமானங்களையும் விமானப்படை தொடர்ந்து இயக்கி வருகிறது. ரபேல் விமானங்களின் நீண்டகால பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக செப்டம்பருக்கு பிறகும், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு ஆதரவு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.