13 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் காஞ்சி மருத்துவமனை நுழைவாயில்; நோயாளிகள் அவதி

1

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நுழைவாயில் ஒன்று, 13 ஆண்டுகளாக மூடி இருப்பதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், ​அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, ​நரம்பியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

கூடுதல் பணம் இதனால், காஞ்சிபுரம் நகர் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான கிராமப்புறப் பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் 1,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை காட்டி, மருத்துவமனை சாலையில் இருந்த ஒரு முக்கிய நுழைவாயில் மூடப்பட்டது.

முன்பு இந்த நுழைவாயில் திறந்திருந்தபோது, பேருந்து நிலையத்திலிருந்து வரும் கிராமப்புற மக்கள், மிக எளிதாக, குறைந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் சென்று வந்தனர்.

இந்த கேட் மூடப்பட்டதால், தற்போது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக் குச் செல்ல, சுற்றி போக வேண்டியுள்ளது. ஏழை எளிய மக்கள் ஆட்டோவிற்கு, 100 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணியர் மற்றும் தாய்மார்கள் நீண்ட துாரம் சுற்றி, அலைச்சலோடு வர வேண்டியுள்ளது. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆட்டோக்களுக்கு கூடுதல் பணம் செலவிட வேண்டியுள்ளது. கிராமப்புற மக்கள் மருத்துவமனைக்கு செல்லவே தயங்கும் நிலை உள்ளது.

எனவே, சுற்றுவட்டார கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், கர்ப்பிணியர், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அலைச்சலை குறைக்கவும், 13 ஆண்டுகளாக பூட்டப்பட்டுக் கிடக்கும் மருத்துவமனை சாலையின் இந்த நுழைவாயிலை உடனடியாகத் திறக்க மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிர்வாகம்தான் முடிவு இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

இந்த நுழைவாயில், 13 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டது. மக்களின் அலைச்சலை தவிர்க்கவும், மருத்துவமனையில் இருந்து பொருள்கள் களவு போவதை தடுக்கவும் இந்த நுழைவாயில் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement