அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

திருவாலங்காடு: கூடல்வாடி கிராமத்தில், அரசு ஊழியர் வீட்டில் புகுந்து, 15 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கூடல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 55. இவர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மனைவியுடன் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதிலிருந்த 15 சவரன் நகை, 30,000 ரூபாயை திருடிக்கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட சிவக்குமார் சத்தமிட முயன்றபோது, திருடர்கள் கத்தியை காண்பித்து, 'கூச்சலிட்டால் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டி தப்பியதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து, சிவக்குமார் திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement