திருமழிசையில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?: ரூ.16.48 கோடியில் 'அம்ரூத்' திட்ட பணி 'ஜவ்வு'

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 16.48 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட 'அம்ரூத் 2.0' திட்டம், மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது. அதனால், 'குடிநீர் பிரச்னைக்கு எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்' என, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி, கடந்த 1953ம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 1963ம் ஆண்டு முதல்நிலை பேரூராட்சியாகவும், பின் 2014ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.


இந்த பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. தற்போது, 22,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 6 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த பேரூராட்சியில், குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தாததால், பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நிரந்தர தீர்வு



திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2018ம் ஆண்டு, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதால், ஒருவருக்கு, 135 லிட்டர் தண்ணீர் தேவை என, உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 2022 - 23ம் ஆண்டு, 16.48 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.

இ தை யடுத்து, கடந்த 2023ம் ஆண்டு, செப்., மாதம், 16.48 கோடி ரூபாய் மதிப்பில், அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த விழாவில், அப்போதைய பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிரு ஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, தற்போது, 5,436 குடியிருப்புகளில், 22,473 பேர் பயன்பெறும் வகையில், 'அம்ரூத் 2.0' திட்டத்தை செயல் படுத்த, பணிகள் நடந்து வருகின்றன.

இந்த குடிநீர் திட்டப் பணிகளை ஆறு மாதத்தில் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

மேலும், இதன் மூலம், வளர்ந்து வரும் திருமழிசை பேரூராட்சியில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், அம்ரூத் திட்டப் பணிகள் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், இன்று வரை பணிகள் நிறைவடையாமல், மந்தமாக நடந்து வருவது, பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 1.43 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Latest Tamil News
இதில், பேரூராட்சி அலுவலகம் அருகே, பிரையாம்பத்து பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக, பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா எனவும், மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பிரச்னை



எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

திருமழிசை பேரூராட்சியில், அம்ரூத் குடிநீர் திட்ட பணிகளில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

காவல்சேரி பகுதியில், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. பணிகள் நிறைவடைந்தவுடன், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement