மதுரையில் பூத்த ‘சங்க இலக்கிய மலர்’

மதுரை: சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்ற ‘பாதிரி’ மரத்தின் மலர்கள் அழகர்மலை பழமுதிர்ச்சோலை பகுதிகளில் பூத்துள்ளதாக ஐந்திணை பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ஒன்றான பாதிரி மரத்தின் மலர்கள் அழகர்மலை பழமுதிர்சோலை பகுதியில் பூத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படும் பாதிரி மரம் மதுரையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.

மஞ்சள், இளஞ்சிவப்பு என இருவகை பாதிரி மரங்கள் உள்ளன. இதில் ‘ஸ்டீரோஸ்பெர்மம் கோயலிஸ்’ என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மஞ்சள் நிறப் பூ பாதிரி மரம் பழமுதிர்சோலை பகுதியில் பரவலாக பூத்துள்ளது. மரம் ஓங்கி உயர்ந்து, பருத்திருந்தாலும் சிறியளவில் மஞ்சள் நிறப் பூக்களை கொண்டிருக்கும். வேனில் காலத்தில் பாதிரி மரம் பூக்கும் என்று சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளதைப் போல இந்த வெயில் காலத்தில் பாதிரி மரங்கள் பூத்துள்ளன.

அறக்கட்டளை சார்பில் ‘தேம் கமழ் பாதிரி’ என்னும் தலைப்பில் பாதிரி மரம் பூத்துள்ளதை பசுமை ஆர்வலர்களை அழைத்து விளக்கினோம் என்றார்.

Advertisement