எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும்? வரும் 13ல் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பதில்!

சென்னை: பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிக்க காத்திருக்கும் மாணவர்களே, உங்கள், 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரியில், எந்த பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் என, நாளை மறுநாள் சென்னையில் நடக்கும், 'தினமலர்' இன்ஜி., கலந்தாய்வு வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கப்பட உள்ளது.

'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 13ம் தேதி, சென்னை தி.நகர், வாணி மகாலில் காலை 10:00 மணிக்கும், பூந்தமல்லி குத்தம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் பிற்பகல் 3:00 மணிக்கும் நடக்க உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து விட்டு, பி.இ., - பி.டெக்., ஆகிய இன்ஜி., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் டி.என்.இ.ஏ., என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து உள்ளனர்.

அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள இளநிலை படிப்பு களுக்கான இடங்கள், தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, கலந்தாய்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.

இந்த இணையவழி கலந்தாய்வு அணுகு முறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, எந்த கல்லுாரியில், எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்பது தொடர்பாக, மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளன.

இந்நிலையில், அண்ணா பல்கலையின், 'டி.என்.இ.ஏ., ஆன்லைன் கவுன்சிலிங்' குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்படுத்தும் நோக்கில், நாளை மறுநாள், 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ஆலோசனைகள் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் வெவ்வேறு 'கட்- ஆப்' மதிப்பெண்களுக்கு, எந்தெந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது; ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது, 'சாய்ஸ் பில்லிங்' எனும், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை சரியாக எவ்வாறு தேர்வு செய்வது; 'புரொவிஷனல் அலாட்மென்ட்' பெறுவது; சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை எவ்வாறு கண்டறிவது உள்ளிட்ட விஷயங்களுக்கு, நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

மேலும், இந்தாண்டு கவுன்சிலிங்கில் அரசு செய்துள்ள மாற்றங்கள் குறித்தும், கல்வி ஆலோசகர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

நிபுணர்கள் பங்கேற்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 செயலர் டி.புருஷோத்தமன், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் ஜி.நாகராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி, தமிழகம் முழுதும் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அனுமதி இலவசம்.

Advertisement