ஒவ்வொரு விடியலுக்கும் நன்றி சொல்லுங்கள்!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும், மும்பையைச் சேர்ந்த கீதா ஸ்ரீதர்:

சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். மும்பையில் குடியேறி, 35 ஆண்டுகளாகி விட்டன. என் அப்பா, புற்று நோயுடன் போராடி இறந்து போனார். அதற்கு முன், 'புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உன்னால் முடிந்த உதவிகளை செய்' என்று கூறியிருந்தார். என் இரண்டாவது மகளின் தோழிக்கு புற்று நோய் வந்தது.

அதற்கான சிகிச்சை எடுத்ததில், முடி கொட்டியதால், என் மகளும் மொட்டை அடித்துக் கொண்டாள். இந்த இரு சம்பவங்கள் தான், புற்று நோய் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகளுக்கு முன், புற்று நோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தேன். அவர்கள் அனைவரும் குணமாகி, நிம்மதியாக இருக்கின்றனர். தற்போது, 18 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளேன்.

என் தந்தையின் பணம், சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றில் வர்த்தக விளம்பரங்கள் பதிவேற்றம் செய்வதன் வாயிலாக வரும் வருமானம் என, அனைத்தையும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செலவுக்கு பயன்படுத்துகிறேன். உலகம் முழுக்க எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். பலரையும் நான் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனாலும், குழந்தைகளுக்கு என்ன தேவை என்று கேட்டாலும், உடனே அனுப்பி வைக்கின்றனர்.

ஆரம்பத்தில், சமையல் குறித்த காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். முதல் ஆறு மாதங்கள் கேலி கிண்டலுடன், எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அவை என்னை மிகவும் பாதித்ததால், அதன்பின் காணொளிகள் பதிவிடுவதை நிறுத்தி விட்டேன். என் மாமியார், கணவர் மற்றும் இரு மகள்களும், 'இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உன் வேலையை பாரு' என்று ஊக்கமளித்தனர்.

அதன்பின், 'உங்களுக்கு என் காணொளிகள் பிடிக்கவில்லை எனில் பார்க்க வேண்டாம்; மோசமான விமர்சனங்களை பதிவிடாதீர்கள்' என்று, சமூக வலைதளத்தில் கேட்டுக் கொண்டேன். இப்போது எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், என் வேலைகளை பார்க்கிறேன்.

காணொளிகளை பதிவிட ஆரம்பித்தபோது, எனக்கு வயது 55. எந்த விஷயத்திற்கும் வயது தடையே இல்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை செய்யுங்கள். வாழ்வது எத்தனை நாட்கள் என்று தெரியாது. அதனால், விடியும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லி, சந்தோஷமாக வாழுங்கள்.

Advertisement