எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!

நாடோடி பழங்குடி இனத்தில் பிறந்து, முதல் பொறியியல் பட்டதாரியான, திருச்சி மாவட்டம், தேவராயன் ஏரி கிராமத்தை சேர்ந்த சுவேதா -ராஜசேகரன்:

நான் படித்த பொறியியல் படிப்பு, என் வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்பதை தாண்டி, என் இனத்திற்கான மாற்றம் என்று கூறலாம். நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஜாதிய அடையாளங்கள் துரத்தின. ஆனால், என் பெயருக்கு பின் வரப்போகும் படிப்பு இதை எல்லாம் மாற்றும் என்று, கஷ்டத்திலும் கடுமையாக படிக்க ஆரம்பித்தேன். அந்த நம்பிக்கை தான், என் இனத்திற்கான இலக்காகவும், நோக்கமாகவும் மாறியது.

எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும், என் இனத்திற்கான திருப்புமுனையாக பயன்படுத்த நினைத்தேன். படிப்பு முடிந்ததும், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நல்ல வேலை என ஏற்றுக் கொண்டு சென்று விட்டால், கிராமத்தில் உள்ளவர்களை யார் கைதுாக்கி விடுவது என கருதி, அந்த வேலைக்கு செல்லவில்லை.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், என் மக்களோடு சேர்ந்து வளர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சாப்பாட்டுக்காக ஊர் ஊராக செல்லும் எங்கள் மக்களுக்கு, நிலையான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதை என் இலக்காக நிர்ணயித்தேன்; அதை நோக்கி பயணிக்கவும் ஆரம்பித்தேன்.

திருமணம் முடிந்து, கணவருடன் சேர்ந்து என் முயற்சிகளை தொடர்ந்தேன். எங்கள் இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய்யலாம் என்று யோசித்தவுடன், கைவினை ஆபரணங்கள் நினைவுக்கு வந்தது. நாடோடி பழங்குடியினர் செய்யும் ஒவ்வொரு ஆபரணத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும். 90 வயது பாட்டிகள் கூட நேர்த்தியாக பாசி மணி கோர்ப்பர்.

ஆனால், அந்த பொருட்களை விற்பதற்கான வழிமுறைதான் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால், 'லடி' என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். நகை வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து, பயிற்சி கொடுத்து வடிவங்களை நவீனப்படுத்தினோம். எங்கள் பெண்களையே பயிற்சியாளர்களாகவும் உருவாக்கினோம்.

ஒரு காலத்தில், 10 ரூபாய்க்கு விற்பனையான அந்த மணிகளை இன்றைக்கு பேரமே பேசாமல், 2,000 ரூபாய்க்கு வாங்குகின்றனர். 'மணி வாங்குங்க' என்று கெஞ்சிய காலம் மாறி, இன்றைக்கு அந்த மணிகளை தேடி மக்கள் வருகின்றனர்.

ஊர் ஊராக சென்ற நாங்கள், இப்போது நிலையான இடத்தில் பாதுகாப்பாக தங்கி சம்பாதிக்கிறோம். எங்கள் ஆண்டு விற்பனை ஒரு கோடி ரூபாய்; நாங்கள் எல்லாரும் அதில் பங்குதாரர்கள்!

***

Advertisement