கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!

புதுக்கோட்டையில், 'பழனியப்பா மெஸ்' என்ற உணவகத்தை நடத்தி வரும், ராதாகிருஷ்ணன் என்ற கண்ணன்:

திருமயம் அருகேயுள்ள கோனாப்பட்டு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், எங்கள் தாத்தா சண்முகம். ஜமீன்தார் போல, 100 ஏக்கர் நிலம், குளத்து பாசனம் என வசதியாக வாழ்ந்தவர். எங்கள் அப்பா பழனியப்பன், குடும்ப சூழல் காரணமாக, எதையும் எதிர்பார்க்காமல் கோபத்துடன், 1967ல் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் ஒரு தமிழாசிரியர். ஆனாலும் விதி, அவரை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தது. அங்கு ஒரு ஹோட்டலில், 11 ஆண்டுகள் பணியாற்றி, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1979ல் இந்த உணவகத்தை ஆரம்பித்தார். அப்போது, ஒரு சாப்பாட்டின் விலை வெறும் ஒண்ணே கால் ரூபாய் மட்டுமே!

கடந்த 1987 - 88 காலகட்டத்தில், தொழில் ரீதியாக பெரிய நம்பிக்கை துரோகத்தை சந்தித்தார் அப்பா. பொருளாதாரத்தில் மொத்தமாக சரிந்து, வாடகை வீட்டுக்கு செல்லும் சூழல் உருவானது. ஆயினும் தன்னம்பிக்கை, கடும் உழைப்பையே மூலதனமாக்கி, மீண்டும் இந்த சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார்.

கிராமப்புறங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து தங்கிப் படித்த மாணவர்கள் பலரும், எங்கள் உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்துள்ளனர். அப்படி படித்து வழக்கறிஞர்கள், உயர் அதிகாரிகள் என பலர் உருவாகி உள்ளனர்.

எங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், உணவை ஆர்டர் செய்ய, 'மெனு கார்டு' எனப்படும் உணவுப் பட்டியலை தேடத் தேவையில்லை. இங்கே உள்ள பெரிய தட்டில், 35க்கும் மேற்பட்ட அசைவ ரகங்களை சுமந்தபடி, ஊழியர்கள் உங்கள் மேஜைக்கு வரும் போதே, கண்முன் அசைவத் திருவிழா நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

காலை 7:30 மணிக்கே ஆவி பறக்க ஆட்டுக்கால் சூப் தயாராகிவிடும். முட்டைமாஸ் எனும் எங்கள் புதுக்கோட்டையின் சிறப்பு உணவு மற்றும் மீனை துாளாக்கி மொறுமொறுவென வறுத்து தரும் துாள் மீன் ஆகியவற்றுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மசாலாவில் குளித்து வந்திருக்கும் நண்டுகளை உடைத்து, அதன் மென்மையான சதையை சுவைக்கும் போது, காரசாரமான குழம்பு நம்மை சப்பு கொட்ட வைக்கும். சின்ன வெங்காயம் இடித்து போட்ட நாட்டுக்கோழி குழம்பும், மசாலா பிரியாமல் எண்ணெயில் குளித்து வரும் சீலா மீன் வறுவலும், மீன் குழம்பும் அசல் கிராமத்து ருசியின் உச்சமாக இருக்கும்.

மேல் பகுதி மொறுமொறு என்றும், உட்புறம் வெண்ணெய் போன்ற மென்மையுடனும் இருக்கும் மட்டன் கோலா, அசைவ பிரியர்களின் சொர்க்கம். புதுக்கோட்டைக்கு வந்தால், பழனியப்பா மெஸ்ஸுக்கு கட்டாயம் வாங்க!

Advertisement