6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி

22


புதுடில்லி: டில்லியில் இருந்து இன்று (ஜூன் 13) பிரதமர் மோடி 6 நாட்கள் வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அடுத்த சில நாட்களில், இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்தியப் புலம்பெயர்ந்தோருடனான கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டுள்ளேன்.

இந்தப் பயணம் நைஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். குறிப்பாக, 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் அதிபர் மேக்ரான் கலந்துகொள்வார். இந்தியாவும் பிரான்சும் 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டை'க் கொண்டாடுவதால், 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

நைஸ் நகரில், அதிபர் மேக்ரானுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன்.ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் எவியான் நகரில் இருப்பேன். அங்கு நான் பல்வேறு உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவேன். நான் வரும் 18ம் தேதி பாரிஸில் இருப்பேன்.

அங்கு, அதிபர் மேக்ரானுடன் இணைந்து விவாடெக் 2026 மாநாட்டில் கலந்துகொள்வேன். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான ஐரோப்பாவின் முக்கியக் கூட்டங்களில் ஒன்றில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நாளில், பிரான்சில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜூன் 18ம் தேதி இரவு மீண்டும் டில்லிக்கு பிரதமர் மோடி திரும்புகிறார்.

Advertisement