இளையான்குடியில் குப்பை வாங்க மறுப்பு: பேரூராட்சியை கண்டித்து போராட்டம்

இளையான்குடி:இளையான்குடியில் குப்பை வாங்க மறுக்கும் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளது.

இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கு வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இங்கு குப்பை கொட்ட போதிய இடம் இல்லாத காரணத்தினால் குப்பை கிடங்கு செல்லும் ரோட்டின் ஓரங்களிலும், அருகிலுள்ள மயானத்திலும்,நகர பகுதிகளிலும் ஆங்காங்கே குப்பையை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும், குப்பைகளை எரிப்பதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அடிக்கடி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் இளையான்குடிக்கு அருகிலேயே கீழாயூர் மற்றும் பல்வேறு இடங்களில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு முயற்சி எடுத்தபோது அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினம் தோறும் குப்பை வாங்காமல் பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால் நகர் பகுதிகளில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடப்பதால் போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க., மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:

கடந்த 2 வருடங்களாக தினந்தோறும் பேட்டரி வண்டிகளில் சென்று ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். தற்போது பேட்டரி வண்டிகள் பழுதடைந்ததை தொடர்ந்து கைவண்டிகளை வைத்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதனால் ஒரு சில பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என்றனர்.

Advertisement