மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தில் பின்னடைவு ;தி.மு.க.கொள்கையால் முடங்கியது
கோவை: தி.மு.க.ஆட்சியில் உருவாக்கிய மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கொள்கையால், கோவையில் மேற்குப்புறவழிச்சாலை 2வது, 3வது கட்ட பணிகள் முடங்கியுள்ளன.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகருக்கு வெளியே மேற்குப்புற வழிச்சாலை, கிழக்குப் புறவழிச்சாலை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், மதுக்கரை அருகே மைல்கல்லில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 32.43 கி.மீ. மேற்குப்புறவழிச்சாலை அமைய வேண்டும்.
திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, 96 சதவீதம் நிலம் எடுக்கப்பட்டு விட்டது. பட்ஜெட்டில் அறிவித்த ரூ.368 கோடியை விடுவித்து, பணியை துவக்க வேண்டியதுதான் பாக்கி.
இப்படி திட்டம் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கும்போது, முந்தைய தி.மு.க. அரசு திடீரென ஒரு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது.
'ரூ.200 கோடிக்கு மேலான பணிகள் எதுவாக இருந்தாலும், இனி தமிழக நெடுஞ்சாலை ஆணையம் (டான்சா) மேற்கொள்ளும்' என்பதே அந்த அறிவிப்பு.
இதன்படி, மேற்குப்புறவழிச்சாலை 2வது, 3வது கட்ட பணிகள் தமிழக நெடுஞ்சாலை ஆணையம் வசம் 2025 ஏப்ரலில் ஒப்படைக்கப்பட்டன.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி, நிதி ஒதுக்கி, பணிகள் துவங்க தயாராக இருந்த சமயத்தில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பிரிவில் இருந்து ஆணையத்துக்கு மாற்றியதால், இத்திட்டம் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.