அம்மாபட்டி - டொம்புச்சேரி ரோட்டில் சேதமான தடுப்புச்சுவரால் அபாயம்

போடி, ஜூன் 12 -

அம்மாபட்டி - டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் வைரவன் கண்மாய் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

போடியில் இருந்து மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் வழியாக டொம்புச்சேரி செல்ல ரோடு வசதி உள்ளது. அம்மாபட்டியில் இருந்து நேரடியாக பஸ் வசதி இல்லை. இதனால் மக்கள் ஒரு கி.மீ., சென்று மேலச் சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் வழியாக பஸ் பயணம் மேற்கொள்ள வேண்டும். மாற்றுப் பாதையாக அம்மா பட்டியில் இருந்து நேரடியாக டொம்புச்சேரி செல்ல ரோடு வசதி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் மக்கள் டூவீலர், கார்களில் சென்று வருகின்றனர். அம்மாபட்டியில் இருந்து டொம்புச்சேரிக்கு நேரடியாக செல்வதன் மூலம் 4 கி.மீ., தூரம் குறைகிறது. இதுபோல் டொம்புச்சேரியில் இருந்து அம்மாபட்டி வழியாக போடி செல்ல 6 கி.மீ., தூரம் குறைகிறது.

அம்மாபட்டி - டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் வைரவன் கண்மாய் உள்ளது. ரோட்டோரம் உள்ள கண்மாய் தடுப்புச் சுவர் மழையால் சேதம் அடைந்து பெரும் பள்ளமாக உள்ளது. சேதம் அடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. விளை பொருட்களை டிராக்டரில் கொண்டு செல்லவும், வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர். இரவில் ரோட்டில் விளக்கு இல்லாததால் வாகனங்களில் செல்லும் போது சேதம் அடைந்த பள்ளம் தெரியாமல் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement