திமுக - அதிமுக பாணியில் அண்ணாமலையின் புதிய கட்சி?

48

சென்னை: பா.ஜ.,வில் இருந்து விலகிய, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 'வீ தி லீடர்' அமைப்பை தொடங்கி, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். தன் இயக்கத்தை, வரும் செப்டம்பரில், அரசியல் கட்சியாக மாற்ற உள்ளார். இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., பாணியில், மாநில, மாவட்ட நிர்வாக அமைப்புகளை உருவாக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

இது குறித்து, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய கட்சியான பா.ஜ.,வில், ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத் தலைவர், பொருளாளர், 10 துணை தலைவர்கள், ஐந்து பொதுச்செயலர்கள், எட்டு மாநில செயலர்கள் உள்ளனர். மாவட்டங்களிலும் தலைவர், பொதுச்செயலர், செயலர்கள் என உள்ளனர். இதேபோல், காங்கிரசிலும் மாநில பொதுச்செயலர்கள் உட்பட பலர் உள்ளனர். இரு கட்சிகளிலும், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளில் பலர், கட்சி பணியில் சரியாக ஈடுபடுவதில்லை.

'தேசிய கட்சிகள் பேசும் மொழி, தமிழக மக்களுக்கு புரிவதில்லை' என, அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, தான் தொடங்க உள்ள கட்சிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வை பின்பற்றி, வார்டு, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநில அளவில் கட்சி அமைப்பு முறையை ஏற்படுத்தி, நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, நீண்ட காலமாக திராவிட கட்சிகளுடன் பயணித்து, தற்போது, அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சிலர் வாயிலாக, அக்கட்சிகளின் அமைப்பு முறை தொடர்பாக, ஆலோசனை கேட்டு வருகிறார்.

பா.ஜ.,வை போல், மாநில பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள் என நியமிக்காமல், மண்டல செயலர்களை நியமிக்க உள்ளார். அதே சமயம், தி.மு.க., - அ.தி.மு.க.,வில், பல ஆண்டுகளாக ஒரே பதவியில் சிலர் இருப்பது போல், அண்ணாமலை கட்சியில் இருக்க முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகளுக்கு, ஒரு பதவியில் இருக்க முடியும், தேர்தலில் எத்தனை முறை போட்டியிட முடியும் என்ற காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாகவும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement