குடும்பத்தை வழிநடத்தும் பெண்களுக்கு மாத சம்பளம் ரூ.30,000!: விபத்து காப்பீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி: 'குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என கருதுவது, அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகும். உண்மையிலேயே அவர்கள் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள். சாலை விபத்தில், ஒரு வீட்டின் இல்லத்தரசி உயிரிழக்க நேர்ந்தால், மாதம் 30,000 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு சமமானவர் என கருதி, அதற்கேற்ற வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2001, நவ., 25 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். வாகன விபத்து தீர்ப்பாயத்தை அவரது கணவரும், மூன்று குழந்தைகளும் அணுகினர். விசாரணையின் இறுதியில், 2.42 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த கணவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை நாடினார். இழப்பீட்டு தொகையை 8.43 லட்சமாக உயர்த்தி, 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
குறைவான இழப்பீடு
சாலை விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழக்கும் போது, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிலையான வருமானம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, குறைவான இழப்பீடு வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
ஆனால், இந்த கணக்கீடுகள் தவறானவை என கூறி, உயிரிழந்த அந்த பெண்ணின் கணவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மோட்டார் வாகன சட்டத்தின்படி இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதன் விபரம்:
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என அழைத்து, அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனெனில், அவர்கள் இல்லத் தரசிகள் மட்டுமல்ல; உண்மையில் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள்.
இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும், குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கும் அரவணைப்பும் மறுக்க முடியாத பொருளாதார மதிப்பு கொண்டவை. வீட்டை நிர்வகிக்கும் ஒரு பெண்ணின் உழைப்பு, நான்கு சுவர்களுக்குள் முடிந்து விடுவதில்லை.
வருங்கால தலைமுறையினரை வளர்த்து எடுப்பதிலும், மனித வளத்தை மேம்படுத்துவதிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. எனவே, அவர்களை வெறும் இல்லத்தரசி என அழைப்பதை விட, தேசத்தை உருவாக்குபவர்கள் என சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்.
குடும்ப வருமானத்தை ஈட்டும் நபர்கள் உண்மையில் இந்த இல்லத்தரசிகளையே சார்ந்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த யதார்த்தம் சமூகத்தில் இன்னும் தகுந்த அங்கீகாரத்தை பெறவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வீட்டுப் பராமரிப்பு உழைப்பு மட்டுமே, 15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கத் துடிக்கும் இந்தியாவின் மனித மூலதனத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்கை வெறும் பணத்தை வைத்து மட்டும் அளவிட முடியாது.
ஒரு பெண் வீட்டில் சமையல்காரராகவோ, பணிப் பெண்ணாகவோ பணியாற்றும்போது அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவர் செய்யும் சேவை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கெடுக்கப்படுகிறது.
அதுவே, அந்த பெண் வீட்டு உரிமையாளரை திருமணம் செய்து, சம்பளம் இல்லாமல், அதே வேலையை செய்ய நேர்ந்தால், நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியமாகி விடுகிறது.
இதையே பொருளாதார மேதை சர் செசில் பிகோ, தேசிய வருவாய் குறைந்துவிடுகிறது என முரணாக கூறியுள்ளார்.
கவலை
காலையில் உணவளித்து, குழந்தைகளையும், வேலைக்கு செல்பவர்களையும் வீடுகளில் இருந்து பெண்கள் அனுப்பி வைப்பதால்தான், வெளி உலகில் உற்பத்தித் திறன் சாத்தியமாகிறது. எனவே, பெண்களின் வீட்டு உழைப்புதான், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார இயந்திரத்திற்கும் எரிபொருளாக விளங்குகிறது.
எனவே, விபத்து இழப்பீடுகளை கணக்கிடும் போது, இனி இவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் என மதிப்பீடு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமாக நடத்தி முடிப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இது போன்ற வழக்குகளை இனி ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியது.
இல்லத்தரசிகளின் கண்ணுக்கு தெரியாத உழைப்பை, தேச வளர்ச்சிக்கான உழைப்பு என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து வழங்கிய இந்த தீர்ப்பு, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு நல்ல செய்திக்கு ஏமப்பா இப்படி ஒன்று குசும்புத் தனமான "குடும்பத்தை வழி நடத்தும் பெண்களுக்கு
மாதச் சம்பளம் ரூ. 30000 " என்னும் தலைப்பு? "அவர்களின் மதிப்புக் குறைவாகக் கணக்கிடப் படுகிறது அதை மாதம்
முப்பதாயிரம் ரூபாய்கள் வரை குறைத்த பட்சம் கணக்கிட வேண்டும்" என்று ஒரு மனிதாபிமானம் மிக்க வழிகாட்டுத்
தீர்ப்பைத் தந்திருக்கும் போது, அதை வரவேற்காமல் விளங்கிக் கொள்ளாமல் கொச்சைப் படுத்துவது தவறு இதற்கு உடனே
அதைவிட அவமானகரமாகக் கருத்துக் பதிப்பதுவும் தவறு ஏறத்தாழ ஒரு தசாவதானி மாதிரி ஒரு குடும்பத் தலைவி
அதிகாலை முதல் இரவு வரையும் இரவிலும் செயற்படவேண்டி இருக்கும் நம் குடும்பங்களில் அவர்களின் மதிப்பீடு வெறும்
முப்பதாயிரம் ரூபாய்கள் தான் என்பது மடடமான மதிப்பீடு ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்குத் தேவைப்படம் அனைத்து
வேலைகளையும் செய்யக்கூயூட்டிய, அவற்றையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக்கூடிய ஒரு பணிப்பெண் கிடைத்தால்
வைத்துக் கொள்ளுங்களேன் அவள் எவ்வளவு சம்பளமும் கிம்பளமும் சலுகைகளும் அதிகாரங்களும் கேட்பாள் என்பதும்
ஆண்டின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும் பணிக்கு வருவாளா என்பதும் அப்படி வந்தாலும் அவ்வளவிற்குத்
திறமையும் பொறுமையும் கொண்ட வளுக்கு அந்தக் குடும்பம், எந்த அளவிற்கு அடிபணிந்து கிடக்க வேண்டும் என்பதும் ஒரு
துளி அளவிற்காவது இவர்களுக்குத் தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப் பணிப் பெண் அந்தக் குடும்பத்
தலைவருக்குப் பெண்டாட்டியாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுத்து, அதை வளர்த்தும் கொடுத்துப் பணியாற்றுவாளா
என்பதும் தெரியுமா? கணவனின் உறவினரையும் உறவு முறை பார்த்துப் பாராட்டி அனுசரித்துப் போவாளா? அப்புறம்
உங்கள் வீட்டிலேயே "ஆயுள் முழுவதற்கும்" அடைந்து கிடந்து வாழ்வாளா? அப்படி இருந்தாலும் அவள் உங்கள் குடும்பத்திற்கு மட்டும் அந்த மாதிரிப் பணியாற்றுவாளா அல்லது தான் வேலைக்கும் போகும் எல்லா வீடுகளிலும் அப்படி இருப்பாளா? அப்படி ஒரு பணிப் பெண் இந்தக் காலத்தில் இருக்கிறாளா நண்பர்களே அப்படி ஒரு பணிப் பெண் உங்களுக்கும் கிடைத்தால் நீங்கள் மாதச் சம்பளம் மட்டும் வாங்கினால் கட்டுப்படி ஆகாது: தீவிர வியாதிகள் மாதிரி எங்காவது வங்கியைக் கொள்ளைதான் அடித்துக் கொள்ள வேண்டும் வாய்க்கு வந்ததைச் சொல்லி விடலாம் அதை இந்தப் பக்கத்தில் பதிவேற்றியும் விடலாம் ஆனால் யதார்த்தத்தில் குடும்பத் தலைவி செய்யும் பணிகளை வேறு இந்தப் பெண்ணும் செய்யவே முடியாது
ஆழ்ந்து சிந்தித்து அருமையான தீர்ப்பை வழங்கிய நீதிஅரசருக்கு வாழ்த்துக்கள். வெறும் முப்பதாயிரம் என்பதெல்லாம் வெகு குறைவாகவே கணக்கிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு என்பது கணக்கில் அடங்காதது. எங்கள் வீட்டின் தாயார் மட்டும் இல்லை என்றால் எங்கள் எதிர்காலமே கேளிவிக்குறியாயிருக்கும். அப்படி ஓர் அசாத்தியமான குலதெய்வம் அவர். அதனை போன்றே எனது மனைவியும் அப்படிதான். அவர்களுக்கு சம்பளம் என்று கணக்கிட்டால் எந்த ஆண்மகனாலும் கொடுக்கவே முடியாது. அப்படி ஒரு அர்ப்பணிப்பு கொண்டவர்கள்தான் பெண்கள். நான்கு சுவற்றுக்குள் இருந்தாலும் உலக அறிவில் அற்புதமானவர்கள். தரமான விலையில் குறைந்த அளவில் பொருட்களை தேடி தேடி வாங்குவதில் பெண்களை போல எவரும் இருக்க முடியாது. ஆண் என்பவன் உழைக்கும் ஆற்றலை அறிவாற்றலை பெற்றவன் என்றால் பெண் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமைசாலி, அந்த திறமை ஆண்களிடம் குறைவே. இப்போதெல்லாம் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள். ஆனால் ஆண்களோ குடும்பத்தை குழந்தைகளை நிர்வகிப்பதில் ஆற்றல் குறைவாகவே உள்ளனர். இருந்தாலும் நீதியரசர் மற்ற நீதியரசர்களை விட மாற்றுக்கோணத்தில் சிந்தித்து போற்றுதலுக்கு உரியதே.
அப்போ சம்பளம் கொடுக்க சொன்னா, ஒரு முதலாளி தொழிலாளி மாதிரி தான் இருக்கணும். அதுக்கு எதுக்கு கல்யாணம். ஒரு செவிலியர் வேலைக்கு வைச்சுக்கலாமே?
பெரிய வேலை செய்யலைன்னா , வேற ஒருத்தர வேலைக்கு வைச்சுக்க முடியும். கல்யாணம் பண்ணின அதுவும் முடியாது.
அதே மாதிரி, ஆம்பளை சம்பாதிச்சு தரும்போது, அவனுக்கும் சம்பளம் தாரணம், அப்போ தான் குடும்பம் குட்டிச்சுவரா போகும்.
நம்ப பாரம்பரியம் என்னன்னே தெரியாம சும்மா எதையாவது தீர்ப்பு தர வேண்டியது.
வெளி நாட்டுல எல்லாம், நம்ப பண்பாடு வேணும் ன்னு சொல்ராங்க, நம்ப ஊருல. இதுங்க தாங்க முடியல
அப்பறம், சனி, ஞாயிற்று கிழமை லீவு. வருடாந்தர போனஸ்.
ஆம்பளைக்கு அதே மாதிரி தாங்க.
சம்பளம் கொடுக்க ஆரம்பிச்சதுனால, ஜீவனாம்சம் கொடுக்க தேவை இல்லை. ஏன்னா, முதலாளி தொழிலாளி மாதிரி ஆகிபோச்சுஇல்ல.
இதெல்லாம் செய்யறதுனால, அம்பாலா ஒழுங்கா குடும்பத்துக்கு வேலை செய்யலைனாலோ, இல்ல பொம்பள செய்யலைனாலோ, எப்பவேணும்னாலும் ஆள மாத்திக்கலாம்
மாத்தும் போது ஜீவனாம்சம் எல்லாம் கிடையாது, என்ன, சமபலம் தான் கொடுக்கறாங்களே.
அப்பறம், காலையில் 8 மணி லேர்ந்து தான் வேலை செய்ய ஆரம்பிக்கணும்.
பசங்கெல்லாம் பள்ளி போகணும்ன்னா அதுக்கு தனி சம்பளம்.
ஆம்பள ஒழுங்கா சம்பாதிச்சு கொடுக்கலேன்னா, மாத்திட வேணும்.
அதே மாதிரி பொம்பளைக்கு.
சமத்துவம் அப்போ தான் நிலை நாட்டப்படும்
நீதிமான்களை போல கோடைவிடுமுறை குளிர்கால விடுமுறை வாரவிடுமுறை கிடைக்கவும் வழிமுறைகள் நெறிப்படுத்தலாமே..மேலும்
-
வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு; திமுக அரசு முடித்து வைத்த நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவு
-
கருணாநிதிக்காக போராடிய திமுகவினர் கோர்ட்டில் கல் வீசிய சம்பவம்: 25 ஆண்டுக்குப் பின் சிறைத்தண்டனை!
-
மம்தாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய திரிணமுல் எம்பிக்கள் 19 பேர்; வெளியானது பட்டியல்!
-
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வரப்பிரசாதம்; 114 ரபேல் விமானங்கள் கொள்முதல் செயல்முறை துவக்கம்
-
குடல் இரைப்பை, கல்லீரல் சிறப்பு மருத்துவர் நாளை விழுப்புரம் வருகை
-
புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா