காமராஜர் சிலை பஸ் நிறுத்தத்தில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகள், இரண்டாவது நாளாக நேற்று அகற்றப்பட்டன.

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ரயில் நிலையம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.

ஜே.என்., சாலை - சி.வி.நாயுடு சாலை மற்றும் குளக்கரை தெரு ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில், பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. சாலையோரம் பயணியர் நிழற்குடையும் அமைக்கப்பட்டு உள்ளது.

குளக்கரை தெருவில் இருந்து பயணியர் நிழற்குடை வரையும், எதிர் பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரையும், காய்கறிகள், பழக்கடைகள் ஆக்கிரமித்திருந்தன. இதனால், காமாராஜர் சிலை அருகில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் கவிதா உத்தரவின் பேரில், நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர், காமராஜர் சாலை சந்திப்பில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, நேற்று முன்தினம் அதிரடியாக அகற்றினர்.

தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக, குளக்கரை தெருவில் இருந்து காமராஜர் சிலை வரை இருந்த, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement