திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்

16

சென்னை: ''பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள் தி.மு.க.,வும், தமிழக வெற்றிக் கழகமும் தான்,'' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.,வின் மாநில மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
பிரதமராக நீண்ட நாட்கள் பணியாற்றிய சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவர் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களை, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டும். மாவட்டந்தோறும் மூத்த தலைவரை அனுப்பி, பொதுக் கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.

அண்ணாமலை விலகியதால், பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தொண்டர்கள் உணரும் வகையில், கட்சி வளர்ச்சி பணியில் நிர்வாகிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.,வுக்கு கொள்கை ரீதியான எதிரி தி.மு.க.,வும், த.வெ.க.,வும் தான். எனவே, கடந்த தி.மு.க., ஆட்சி ஊழல்கள், த.வெ.க., ஆட்சியில் நடக்கும் தவறுகளை மக்களிடம் பேச வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை; நான் பார்த்துக் கொள்கிறேன். ஊர் ஊராகச் சென்று தொண்டர்களை சந்திப்பது மற்றும் மக்களிடம் மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை கூறுவது மட்டுமே உங்கள் வேலை. இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.

@block_B@ மத்திய கேபினட் அமைச்சர் பதவி

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது, தமிழகத்தில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருபவர்களில் ஒருவருக்கு, கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்க அமித் ஷா விருப்பமாக உள்ளார். அவரை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி, மக்கள் சந்திப்பு மற்றும் குறைகேட்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் வாயிலாக தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியை வேகப்படுத்த அமித் ஷா வியூகம் வைத்துள்ளார்.block_B

Advertisement